×

முகுந்தராயர் சத்திரம் நீர்தேக்கப்பகுதியில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதைக்காக கடல் மட்டம் ஆய்வு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் போக்குவரத்திற்காக முகுந்தராயர் சத்திரம் நீர்த்தேக்கப்பகுதியில், நேற்று கடல் மட்டம் குறித்த ஆய்வுப்பணியில் சென்னை ஐஐடி மாணவர்கள் ஈடுபட்டனர்.1964ல் வீசிய கடும் புயலால் அழிந்த தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து துவக்க மத்திய அரசு திட்டமிட்டது. ரூ.150 கோடி செலவில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் போக்குவரத்து துவங்கப்படுமென அறிவித்துள்ளது. இதற்காக ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 80 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து இருந்த பாதையை, அதிகாரிகள் பார்வையிட்டு தண்டவாளம் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.

ராமேஸ்வரம் ரயில் நிலையம் துவங்கி கரையூர், புதுரோடு, ஜடாமகுட தீர்த்தம், கோதண்டராமர் கோயில், முகுந்தராயர்சத்திரம் பகுதி வழியாக தனுஷ்கோடி ரயில் நிலையம் வரை, அதிகாரிகளால் நில அளவை செய்யும் பணியும் நடைபெற்றது. மேலும், ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான ரயில்பாதை அமையவுள்ள நிலப்பகுதியில் கடல் மட்டம் குறித்த ஆய்வுப்பணி நேற்று துவங்கியது.சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள் 4 பேர், இதற்கான ஆய்வுக்கருவிகளுடன் சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைக்கும் பகுதியில் சேரான்கோட்டை துவங்கி கோதண்டராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் பகுதி முழுவதும் நீர்த்தேக்கப்பகுதியாக உள்ளது. இங்கு மழைக்காலங்களில் 3 அடி முதல் 5 அடி வரை ஆழத்திற்கு மழைநீர் தேங்கும். இதனால் இரண்டு கடலுக்கும் இடையே அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கப்பகுதியில் கீழே நீர் ஓடும் வகையில் 10க்கும் மேற்பட்ட உயர்மட்ட பாலம் கட்டி ரயில்பாதை அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டள்ளது.

இதற்காகவே நேற்று நீர்த்தேக்கப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து எந்த அளவு உயரத்திற்கு தண்டவாளம் செல்லும். பாலம் கட்டப்பட வேண்டும் என்பது குறித்தே இந்த ஆய்வுப்பணி நடந்தது. தொடர்ந்து 2 நாட்கள் மேலும் பல கட்டங்களாக, தனுஷ்கோடி வரையில் நீர்த்தேக்கப்பகுதியில் ஆய்வுப்பணி நடைபெறுகிறது. அடுத்தடுத்து ரயில்வே துறையினால் நடத்தப்பட்டு வரும் ஆய்வுப்பணியைத் தொடர்ந்து, விரைவில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைத்து மின்சார ரயில் இயக்குவதற்கான பணி துவங்கவுள்ளது.

Tags : Railway Authorities ,Rameshwaram ,Dhanushkodi ,Sea level survey ,
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...