சென்னை, புறநகர் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அருகே உள்ள திருமுல்லை வாயில் பகுதியை சேர்ந்த டில்லிபாபு என்பவர் தனது நண்பர் ஆனந்த் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாதவரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இருவர் மீதும் கார் மோதும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் பாடி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது நண்பர் மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று இவர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிகழ்வு நடந்த சிலமணி நேரத்தில் காசிமேடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாரதி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது கண்டெய்னர் லாரி மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதே போல் முகப்பேர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான நிர்மல் என்பவர் தனது நண்பர் கேலட் பென்னி என்பவருடன் மதுரவாயல் தாம்பரம் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதியதில் நிர்மல் நிகழ்விடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தார்.

இதே போன்று திருநின்றவூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை தடுப்பில் மோதி உயிரிழந்துள்ளார். தலைக்கவசம் அணியாமல் சென்றதாலேயே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மோசமான சாலைகள் ஒருபுறம் இருந்தாலும் நமது உயிரை பாதுகாப்பதில் முதல் பங்கு நமக்கு மட்டுமே உண்டு என்பதை அறிந்து அனைவரும் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: