மாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கொண்டு வரப்படும் ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்தை சட்டவிரோதமானது என கூற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த மாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடைவிதிக்கக்கோரி அப்பகுதியினர் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தனர். மாடம்பாக்கம், சிட்லம்பாக்கம் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு வசதியாக ரூபாய் 2 கொடியே 70 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த மாடம்பாக்கம் ஏரியில் 5 கிணறுகள் தோண்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை தொடர்ந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் கிணறுகள் தோண்ட தமிழக அரசுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மாடம்பாக்கம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததுடன் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் கிணறுகள் தோண்ட அனுமதிக்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்வதற்காகவே ஏரியில் கிணறுகள் அமைக்கவுள்ளதாக தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. இதனை ஏற்ற நீதிபதிகள் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசு கொண்டு வரும் ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்தை சட்டவிரோதமானது என கூறமுடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: