அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி..: அபுதாபி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு

அபுதாபி: அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அபுதாபி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்சு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலாவதாக நேற்று முன்தினம் பிரான்சு வந்தடைந்தார். முதல் கட்டமாக இருநாடுகளின் தூதரக அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அதன் பின், பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாடுகளின்  நட்புறவு, அதனை மேலும் வலுப்படுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில், பிரான்ஸ் பயணத்தை முடித்து கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி இளவரசர் முகமது பின் சையது பிரதமர் மோடியை வரவேற்றார். மேலும், அபுதாபி உயர் அதிகாரிகளும், அபுதாபி நிர்வாக விவகார ஆணையத்தின் தலைவர் கல்தூன் கலீஃபா அல் முபாரக் ஆகியோரும் பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, இருநாட்டு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.

பிரதமர் மோடியின் இந்த சுற்றுப் பயணத்தின் போது, அந்நாட்டில் பணமில்லா பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளும் வகையில் ரூபே அட்டையின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கிறார். மகாத்மா காந்தியின் 150வது நினைவு தினத்தை கொண்டாடும் வகையில் அவரது உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை அபுதாபி இளவரசருடன் இணைந்து மோடி வெளியிடுகிறார். பயணத்தின் இறுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஷேக் ஜாயேத் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. இதனையடுத்து, நாளை பஹ்ரைன் செல்லும் பிரதமர், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசுகிறார். பின்னர், 25ம் தேதி மீண்டும் பிரான்ஸ் செல்லும் மோடி, 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: