திருவெறும்பூரில் 4வது நாளாக வேலை நிறுத்தம் துப்பாக்கி ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் நூதன போராட்டம்: யாகம் வளர்த்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு

திருவெறும்பூர்: தனியார் மயமாக்குதலை கண்டித்து 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்டு, உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாகம் வளர்த்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியஅரசின் பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் துப்பாக்கி தொழிற்சாலைகளை மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கண்டித்து நாடுமுழுவதும் உள்ள 41 படைக்கலன் தொழிலாளர்கள் ஒரு மாத காலம் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு ஆதரவாக ஊழியர்களின் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போராட்டத்தில் நேற்றுமுன்தினம் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் 4வது நாளாக நேற்று துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்டு, உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி பெற யாகம் வளர்த்து, வழிபாடு நடத்தினர். இதனால் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் ஹெச்ஏபிபி நிறுவனத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பணிக்கு சென்ற ஊழியர்களும் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: