திருப்பத்தூர் அருகே 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. அவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்  தூய நெஞ்சக் கல்லூரி  உதவி பேராசிரியர் ஆ.பிரபு மற்றும் சு.சிவசந்திரகுமார், ஆய்வு மாணவர்கள் பொ.சரவணன், ரா.சந்தோஷ் ஆகியோர் ஏலகிரி மலைச் சரிவில் அமைந்துள்ள குண்டு ரெட்டியூர் காட்டுப் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான குறியீட்டுடன் கூடிய பொருட்களைக் கண்டெடுத்தனர். இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது: திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் உள்ள மலையடிவார கிராமம் குண்டு ரெட்டியூரில் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்தனர்.

தற்போது, இங்கு 2ம் கட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பல்வேறு தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இதில், உடைந்த சுடுமண் புகைப்பான், குறியீட்டுடன் கூடிய கருப்பு, சிவப்பு பானை ஓடு, தந்தத்தால் ஆன ஆபரணம் துண்டுகள், நெசவு செய்ய பயன்படும் தக்ளி, சுடுமண் மணிகள், வண்ணம் தீட்டப்பட்ட களிமண் ஜாடி கைப்பிடி, சுடுமண் தாங்கிகள் ஆகிய பொருட்கள் கிடைத்தது.  இப்பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது குறியீட்டுடன் அடங்கிய கீறல் பானை ஓடாகும். இப்பானை ஓட்டில் அரிய வகை குறியீடு உள்ளது. அதன் கீழே வண்ணச்சாந்தால் கோடுகள் வரையப்பட்டுள்ளன. கருப்பு சிவப்பு வண்ணத்துடன் கூடிய இப்பானை ஓடானது ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.  இவ்வாறு அவர் கூறினார். தற்போது இந்த பொருட்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வைக்காக திருப்பத்தூர்  தூய நெஞ்சக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: