தூத்துக்குடி துறைமுகத்தில் 3000 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: மத்திய அமைச்சர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி - கொழும்பு துறைமுகம் இடையே 2.55 மில்லியன் சரக்கு பெட்டகங்கள் போக்குவரத்து நடந்து வருவதாக மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக் எல்.மண்டாவியா தெரிவித்தார். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில், கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை, 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்தது. விழாவுக்கு  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணை சேர்மன் வையாபுரி முன்னிலை வகித்தார். மத்திய கப்பல் மற்றும் உரம், ரசாயனத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு ) மன்சுக் எல்.மண்டாவியா, இந்த பணிக்கு அடிக்கல் நாட்டி  துவக்கி வைத்தார். பின்னர் துறைமுகத்தில் உள்ள நிலக்கரி இறக்குமதி தளம், வடக்கு சரக்கு தளம், மார்ஷலிங் யார்டில் இருந்து துறைமுக பரிமாற்ற முனையத்திற்கு இடையே ரயில் பாதை அமைக்கும் பணி, 140 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் மின் சக்தி ஆலை பணிகள் உட்பட 139 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

பின்னர், மன்சுக் எல் மண்டாவியா அளித்த பேட்டி:

தூத்துக்குடி துறைமுகம் பல வளங்களை கொண்டுள்ளது. இங்கு துறைமுக சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்துக்கும், கொழும்பு துறைமுகத்துக்கும் சராசரியாக 2.55 மில்லியன் சரக்கு பெட்டகங்கள் போக்குவரத்து நடக்கிறது. அந்த அளவுக்கு வளம் கொண்ட தூத்துக்குடி துறைமுகத்தில் ₹3 ஆயிரம் கோடி செலவில் பல வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. இங்கு பல தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்காக 900 ஏக்கர் இடம் தயாராக உள்ளது. இதன்மூலம் இப்பகுதி முன்னேற்றம் அடையும். இந்த திட்டம் வரும் 2025ம் ஆண்டுக்குள் வடிவமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: