புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அதிமுக எம்.எல்.ஏ மீது நிர்வாகி பாய்ச்சல்: அமைச்சர் குறித்து மற்றொரு எம்எல்ஏ ஆவேசமாக பேசியதால் பரபரப்பு

திருவலம்: திருவலத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் அதிமுக நிர்வாகி எம்எல்ஏவை எதிர்த்து பேசினார். அப்போது மற்றொரு எம்எல்ஏ அமைச்சர் குறித்து ஆவேசமாக பேசி கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த அம்முண்டி கிராமத்தில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலை சார்பில் புதிய பெட்ரோல் பங்க் நிலையம் மற்றும் விவசாய தகவல் மையம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.  அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு ஆலை வளாகத்தில் விவசாய தகவல் பயிற்சி மையம், பெட்ரோல் பங்க்கை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் சண்முக சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சோளிங்கர் எம்எல்ஏ சம்பத் பேசும் போது, பிரம்மபுத்தை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் மதியழகன் திடீரென எம்எல்ஏவை நோக்கி அம்மா பற்றி பேசாத நீ எல்லாம் ஒரு உண்மை தொண்டனா? என ஒருமையில் பேசினார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கட்சியினர் அவரை சமாதானப்படுத்தினர்.  தொடர்ந்து, கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன், அமைச்சர் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும்’’ என ஆவேசமாக கூறிவிட்டு விழாவை புறக்கணித்து அங்கிருந்து வேகமாக வெளியேறினார். இதனால், கூட்டத்தில் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, சோளிங்கரை சேர்ந்த விவசாயி நாராயணன் கரும்பு நிலுவை இந்த ஆண்டிற்கானது மட்டுமே அறிவித்துள்ளீர்கள். கடந்த 3 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவை தொகை 5 லட்சம் எப்போது வழங்கப்படும் என கேட்டார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமரவைத்தனர்.

Related Stories: