வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு ராணிப்பேட்டை புதிய மாவட்டத்துக்கு ஆற்காடு பெயர் வைக்க கோரிக்கை

ஆற்காடு: வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். அவரது அறிவிப்பால் பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பும், அதிருப்தி குரல்களும் எழுந்துள்ளன. இதில் வரலாற்று சிறப்புமிக்க ஆற்காடு நகரின் பெயரில் மாவட்டம் அறிவிக்காததால்  ஆற்காடு தாலுகா மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஆற்காட்டில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற நகரின் முக்கிய பிரமுகர்கள் புதிய மாவட்டத்திற்கு ஆற்காடு பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பண்டைய வரலாற்றிலும், பிற்கால வரலாற்றிலும் வேலூர், கடலூர் ஆகிய 2 மாவட்டங்களும் வடாற்காடு, தென்னாற்காடு என பெயர் சூட்டப்பட்டுதான் அழைக்கப்பட்டு வந்தன. எனவே, ஆற்காடு பெயரை புதிதாக அமைக்கப்பட உள்ள மாவட்டத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தலைமையில் 800க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஆற்காடு தாசில்தார் வத்சலாவிடம், முதல்வருக்கு கோரிக்கை மனுவை அளித்தனர்.

Related Stories: