ஓசூர் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் குவிப்பு அட்டகாசம் செய்யும் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி: கும்கிகளுடன் கால்நடை மருத்துவக்குழுவினர் கண்காணிப்பு

ஓசூர்: ஓசூர் அருகே முகாமிட்டு, அட்டகாசம் செய்து வரும் 2 யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில், 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக 2 யானைகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. சானமாவு வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இந்த யானைகள், ஓசூர் அருகே கதிரேப்பள்ளி, பேரண்டப்பள்ளி, கெலவரப்பள்ளி அணை பகுதிகளில் சுற்றித்திரிந்தவாறு, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.  இந்நிலையில், 2 யானைகளையும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில், வனத்துறையினர் இறங்கினர். நேற்று காலை, கதிரேப்பள்ளி பகுதியில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி தலைமையில் வனத்துறை ஊழியர்கள் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு பணிக்காக ஹட்கோ போலீசாரும் கதிரேப்பள்ளி கிராமத்திற்கு விரைந்தனர்.

முன்னதாக முதுமலையில் இருந்து, கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையிலான குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். மொத்தம் 100 பேர் சேர்ந்து, காலை 11 மணியளவில் கும்கி யானைகளுடன் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். அப்போது, அடர்ந்த காட்டிற்குள் பள்ளத்தாக்கு பகுதியில், இரண்டு யானைகளும் முகாமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 11.30 மணியளவில் நவீன துப்பாக்கி உதவியுடன் மயக்க ஊசியை செலுத்த முயன்றனர். ஆனால், அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகளுக்கு அருகில் செல்ல முடியாமல், குறிபார்த்து சுடுவதில் சிக்கல் ஏற்பட்டது. மயக்க ஊசியும் மரக்கிளைகளில் சிக்கி, இலக்கினை விட்டு விலகியது. இதுபோல், காலை முதல் மாலை வரை, 7 முறை மயக்க ஊசி செலுத்தியும் யானைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால், வனத்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையடுத்து, இன்று அதிகாலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Related Stories: