வேலை கேட்டு யாரும் என் வீட்டுக்கு வராதீங்க...அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் மக்கள் அதிருப்தி

திண்டுக்கல்: ‘பொதுமக்கள் வேலை கேட்டு என் வீட்டிற்கு வர வேண்டாம்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி நந்தனார்புரத்தில் முதல்வரின் சிறப்பு மனுக்கள் முகாம் நேற்று நடந்தது. இதனை துவக்கி வைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:மக்களை தேடி வந்து அதிகாரிகள் மனுக்கள் வாங்கும் நோக்கத்திற்காக இம்முகாம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும். முன்பெல்லாம் பெற்றோர்கள், ‘பிள்ளைகள் 10ம் வகுப்பு படித்துள்ளனர்’ என எங்களிடம் தெரிவிப்பர். தற்போது பெற்றோர்கள், பிள்ளைகள் பிஇ படித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்களில் பலர் வேலை கேட்டு எனது வீட்டிற்கு வருகின்றனர்.  

வனத்துறை எனது துறை என்பதற்காக வேலை கேட்டு தினமும் 100 பேர் வருகின்றனர். கேட்டால், ‘‘நாங்கள்தான் உங்களை அமைச்சராக தேர்வு செய்தோம். நீங்கள் வேலை கொடுக்க மாட்டேங்குறீங்களே’’ என்கின்றனர். வனத்துறையில் வனக்காவலர்கள் பதவிகள் உள்ளன. இதை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினாலும் வேலை உங்களை தேடி வரும். எனவே, வேலை கேட்டு எனது வீட்டுக்கு வர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

வேலை கேட்டு என் வீட்டிற்கு வர வேண்டாம் என அமைச்சர் பேசியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

‘அது வேற வாய்’

மேலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘திண்டுக்கல்லில் உள்ள தண்ணீர் பிரச்னை உங்களுக்கு தெரியும். செக்கிற்கு மாடு கொடுத்தாலும் திண்டுக்கல்லுக்கு பெண் தர மாட்டார்கள். இந்நிலையை போக்கி திண்டுக்கல்லில் 48 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைப்பார்கள். அதாவது ஒரு தேர்வுக்கு 10 பேர் வீதம் கடிதங்கள் வரும். அந்த நேரத்தில் எங்களிடம் வந்தால் உங்கள் பிள்ளைகளை 10 பேரில் முதலாவதாக கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்’’ என்றார். சிறிது நேரத்திற்கு முன்புதான் அரசு தேர்வுகள் ஆன்லைனில் நியாயமாக நடக்கிறது. யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பேசிய அமைச்சர், ‘தற்போது எங்களிடம் வாருங்கள் நாங்கள் பார்த்து கொள்வோம்’ என பேசியது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

Related Stories: