குற்றால அருவிகளில் குளிக்க தடை நீக்கம்: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நடவடிக்கை

தென்காசி: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று காலை விலக்கிக் கொள்ளப்பட்டது. குற்றாலத்தில் இந்தாண்டு  ஜூன், ஜூலை  மாதங்களில் சீசன் ‘டல்’’ அடித்த நிலையில், ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்தே  சாரல் நன்றாக பெய்து வருகிறது. ஆகஸ்ட்  மாதத்தில் ஏற்கனவே வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான அருவிகளில் 5 நாள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினமும்  மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதையடுத்து அன்று மாலை முதல்  மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி என அனைத்து  அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையில்  வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து முதற்கட்டமாக ஐந்தருவி, பழைய  குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை  விலக்கிக் கொள்ளப்பட்டது.

 

காலை 10 மணியளவில் மெயினருவியில்  தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக  விழுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியில் விழுந்த  கற்களால் 7 பேர் காயம்: நேற்று மதியம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது  திடீரென பெண்கள் பகுதியில் சிறு, சிறு கற்கள் விழுந்தது. இதில் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆண்கள் பகுதியிலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது இவர்கள்  அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். அருவி தண்ணீருடன் கற்கள் விழுந்த சம்பவத்தால் ஐந்தருவியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குளிக்க தடை விதிக்கப்பட்டது.  மதியத்திற்கு பிறகு மீண்டும் குளிக்க  அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: