மதுரை அருகே லேப்டாப் கேட்டு அமைச்சரை மாணவிகள் திடீர் முற்றுகை

பேரையூர்:  மதுரை மாவட்டம், பேரையூர் காந்திஜி நினைவு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற அமைச்சரை, கடந்த 2017- 18ம் ஆண்டு பேரையூர்  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவிகளிடம் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தினார்.  அப்போது, ‘‘தற்போது லேப்டாப்  ஸ்டாக் இல்லை. ஓரிரு மாதங்களில் உங்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். நான் படித்த காலத்தில் பென்சில் கூட யாரும்  வாங்கித்தரவில்லை. ஆனால், அரசு  லேப்டாப் இலவசமாக வழங்குகிறது’’ என்று கூறினார். ‘‘அப்போது இதுபோன்ற இலவசத்திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. அப்படி இருந்தால் நீங்களும் எங்களைப்போல் கேட்டு வந்திருப்பீர்கள்’’ என்று மாணவிகள் பதிலளித்தனர். இதனால்  அமைச்சர் உதயகுமார், கலெக்டர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் காரில் ஏறச் சென்றனர். அவர்களை நோக்கி மாணவிகள் சிலர் ஓடினர். ஆனால், அதற்குள் அவர்கள் சென்று விட்டனர்.

Related Stories: