மத்திய உளவுத்துறை எச்சரிக்கை தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் கடும் கண்காணிப்பு,..விமானநிலையம், ரயில்வே ஸ்டேஷன் உஷார்

கோவை: தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உட்பட பல மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.  இலங்கையில் இருந்து 5 தீவிரவாதிகளும், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு தீவிரவாதியும் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை நேற்று முன்தினம் இரவு எச்சரிக்கை விடுத்தது. தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியதற்கு கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உடந்தையாக செயல்பட்டதாகவும் தெரிவித்தது. குறிப்பாக கோவையில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியானவுடன் கோவை முழுவதும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவே கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்தநிலையில், தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி நேற்று முன்தினம் மாலை அவசரமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

பின்னர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா,  டிஐஜி கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் பெருமாள், பாலாஜிசரவணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து ஏடிஜிபி ஜெயந்த் முரளி, பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக சூலூர் விமானப்படை தளத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார். அதைத்தொடர்ந்து, தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவி இருக்கலாம் என் சந்தேகத்தின்பேரில் மாநகர போலீசார், அதிவிரைவுப்படையினர் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.   கோவை நகரில் நுழைவு பகுதிகளான 12 செக்போஸ்ட்கள் மற்றும் கோவை மாவட்ட நுழைவு பகுதிகளில் 27 செக்போஸ்ட்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லைகளில் கண்காணித்து கோவையில் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

கோவை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கமிஷனர் பேட்டி: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறைக்கு வந்த தகவலையொட்டி கோவை மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து செக்போஸ்ட்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. கோவை மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

எல்லைகளில் கண்காணிப்பு: திண்டுக்கல்-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழக-கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  ஈரோடு மாவட்டத்தின் மாநில எல்லைப்பகுதியான பர்கூர், தாளவாடி, கடம்பூர், ஆசனூர் மற்றும் மாவட்ட எல்லைப்பகுதிகளான கருங்கல்பாளையம், நொய்யல், கொடுமுடி, சின்னப்பள்ளம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 13 கடலோர மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 5,000 போலீஸ்

ெசன்னையை பொறுத்தவரையில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி 12 துணை கமிஷனர்கள் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் தனித்தனி குழுவாக வாகன சோதனைகள் மற்றும் லாட்ஜிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த நபர்கள் மற்றும் தீவிரவாதிகளின் நடமாட்டங்களை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகளை வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் தீவிர சோதனைக்கு பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழக்கமாக விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தும் பகுதிகளில் வெளியாட்கள் நடமாட்டம் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நாராயணசாமி கார்

புதுவை  முதல்வர் நாராயணசாமி நேற்று காலை  10.15 மணிக்கு டெல்லியிலிருந்து  விமானத்தில் சென்னை வந்தார். அவர் காரில் ஏற வரும்போது பாதுகாப்பு  அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை காரை சோதனையிட்டனர். இதனால் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், போலீசார் இது வழக்கமான சோதனைதான் என்று  சமாளித்தனர். நாராயணசாமியும் அவர்கள் கடமையை செய்கின்றனர் என்று கூறினார்.  சென்னை விமான நிலையம் தற்போது முழு காவல் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்க சதி

வரும் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. 4 மற்றும் 6ம் தேதிகளில் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்தி 250 பேரை கொன்றதை போன்று தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவன்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு வளையத்தில் பிரபல கோயில்கள்

 பிரபல கோயில்களில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தஞ்சாவூர் பெரிய கோயில், திருச்சி ரங்கம் கோயில் போன்ற பிரபல ஆலயங்கள் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாக் தீவிரவாதி...?

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இலங்கையை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தில் கோவை உட்பட சில இடங்களில் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களில் இலியாஸ் அன்வர் என்ற பாகிஸ்தான் தீவிரவாதியும்  ஒருவர் என்று  மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 31ம் தேதி நள்ளிரவுடன் சென்னை விமான  நிலையத்தில்  விலக்கி கொள்ளப்பட இருந்த ‘ரெட் அலார்ட்’ மேலும் சில  தினங்கள், மறுஅறிவிப்பு வரும் வரை நீடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

யார் இந்த அப்துல் காதர்?

தீவிரவாதிகளுக்கு கேரள மாநிலம் திருச்சூர் கொடுங்கல்லூரை சேர்ந்த அப்துல் காதர் கொலில் என்பவர் உதவி புரிந்ததாக தெரிகிறது. இவர், இலங்கை குண்டு வெடிப்பில் என்ஐஏ அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பிடித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: