×

அனைத்து நிறுவனங்களுக்கும் அச்சுறுத்தல் கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை

* அச்சுறுத்தல்: நிதி துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஒட்டுமொத்த நிதி அமைப்புகளும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.
* குறிப்பாக தனியார் துறையில் யாரும் யாரை நம்பி கடன் கொடுக்க தயாராக இல்லை. அதேவேளையில் பணப்புழக்கத்தில் தேக்கம் உள்ளது.
* தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் துறையினர் உள்பட அனைத்து துறையினர் இடையேயும் குறிப்பாக பொதுமக்கள் இடையேயும் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:  நிதித் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது இதற்கு முன்பு ஏற்பட்டது இல்லை. இதுபோன்ற மோசமான நிலையை கடந்த 70 ஆண்டுகளில் நாடு சந்தித்தது கிடையாது. ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் அனைத்தும் பெரும் நெருக்கடிக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளன. யாரையும் யாரும் எளிதாக நம்பும் நிலை இல்லை. தனியார் துறைகளுக்குள் யாரையும் நம்பி யாரும் கடன் கொடுக்க தயாராக இல்லை.

ஆனால், அதே வேளையில், அனைவரிடமும் போதிய அளவுக்கு பணம் கைவசம் உள்ளது. கொடுத்தால் பணம் திரும்ப வராது. திவால் போன்ற நடவடிக்கையால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த பீதியை போக்க வேண்டும். தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்த மோசமான நிலையில் இருந்து சிறிது மீள முடியும் இதற்கு அரசு அசாதாரணமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். நிதி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த நிதியாண்டில் (2018-19) பொருளாதார வளர்ச்சி என்பது 6.8 சதவீதமாக சரிந்தது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். மத்திய பட்ஜெட்டில் இதை சமாளிக்க பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் நிதித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, நாட்டின் பொருளாதாரத்தை மந்தமான நிலைக்கு இழுத்துச் சென்றுவிட்டது.

பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, திவால் நடவடிக்கை (ஐபிசி) ஆகிய அமல்படுத்தப்பட்ட பின்னர் நாட்டின் பொருளாதார நிலைமையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது. கைவசம் பணம் வைத்திருந்தவர்கள் எல்லாம் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்தவர்கள் பண நெருக்கடியில் சிக்கினர்.  இதனால் அவர்களிடம் அச்ச உணர்வு தலைதூக்கியது. பண புழக்கமும்் முடங்கிவிட்டது. இவை எல்லாம் நிலைமையை மேலும் மோசமாகிவிட்டன. இதற்கு எளிதில் தீர்வு காணக்கூடிய பதில் இல்லை. இந்த நிதி நெருக்கடி, பொருளாதார மந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்றால் அரசு விரைவில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நடுத்தர நிலையில் தனியார் முதலீடுகளை ஊக்கவிக்க வேண்டும் அப்போதுதான் இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியும்.

வங்கிகள் கடந்த காலங்களில் வாரி வழங்கிய கடன்கள் கடந்த 2014க்கு பின்னர் வராக்கடனாக மாறி பெரும் சுமையை ஏற்றிவிட்டது. இதனால் வங்கிகள் முடங்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளன. வங்கிகளும் கடன் கொடுக்க முடியவில்லை, இவை எல்லாம் சேர்ந்து பொருளாதாரத்தை மந்த நிலைக்கு தள்ளிவிட்டன. இந்த நிலைமையை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நோக்கத்தில் அரசும் நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இவ்வாறு ராஜீவ் குமார் பேசினார்.

Tags : All companies, economic crisis, vice president
× RELATED இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான...