×

இந்திய கடலோர படையுடன் 5 நாள் கூட்டுப்பயிற்சி அமெரிக்க ரோந்து கப்பல் சென்னை வருகை

சென்னை: இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து 5 நாட்கள் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள அமெரிக்க ரோந்து கப்பல் ‘ஸ்டிராட்டன்’ நேற்று சென்னை வந்தது. இந்தியா மற்றும் அமெரிக்க கடலோர காவல் படையினர் இணைந்து, சென்னை அருகே வரும் 27ம் தேதி வரை 5 நாட்கள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதில் பங்கேற்க அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ‘ஸ்டிராட்டன்’ நேற்று காலை சென்னை துறைமுகம் வந்தடைந்தது. அமெரிக்க ரோந்து கப்பலை சென்னையை சேர்ந்த 60 பள்ளி மாணவர்கள் இருநாட்டு தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி வரவேற்றனர். இதேபோல், இரு நாடுகளை சேர்ந்த கடலோர காவல்படையினர் நல்லெண்ண அடிப்படையிலும், தொழில்நுட்ப திறன்களை பரிமாறிக்கொள்ளவும் இந்த கூட்டுபயிற்சி நடைபெற உள்ளது. மேலும், அமெரிக்க ரோந்து கப்பலில் உள்ள வசதிகள் குறித்து இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படை அதிகாரிகள் எடுத்துரைக்க உள்ளனர்.

சென்னை அருகே நடுக்கடலில் நடக்க உள்ள இந்த பயிற்சியின் போது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல்களை எவ்வாறு மீட்பது, கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்பது, தீ விபத்து ஏற்படும் கப்பல்களில் உள்ளவர்களை காப்பாற்றுவது மற்றும் கப்பல்களுக்கிடையே பொருட்களை பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு சாகச பயிற்சிகளில் இருநாட்டு வீரர்களும் ஈடுபட உள்ளனர்.  மேலும், கூட்டுப்பயிற்சியை தவிர்த்து இரு நாட்டினரின் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய உத்திகள், தகவல் பரிமாற்றம், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. இந்திய கடலோர ரோந்து கப்பலான சவுரியா இந்த கூட்டுப்பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதையடுத்து, அமெரிக்க ரோந்து கப்பலின் கேப்டன் பாப் லிட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய கடலோர காவல்படை சிறப்பாக செயல்படுகிறது.

இருநாட்டு உறவுகளும் மிகவும் வலுவாக உள்ளது. இந்தோ-பசிபிக் மண்டலத்தில் அமைதியும், வளமும் நீடிக்க இந்தியாவும், அமெரிக்காவும் உறுதிபூண்டுள்ளது. இந்திய கடலோர காவல்படையுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இயற்கை பேரிடர் காலங்களில் மக்களை மீட்பது, ஹெலிகாப்டர் மூலம் கடலில் சிக்கியவர்களை மீட்பது, தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை குறித்து புரிந்துணர்வு பயிற்சியில் ஈடுபட உள்ளோம். இதேபோல், கருத்தரங்கம் மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளது. சிறந்த முறையில் அனுபவங்களை இந்த பயிற்சியின் மூலம் பரிமாறிக்கொள்ள முடியும். இவ்வாறு கூறினார்.


Tags : Indian Coast Guard, Joint Training, American Patrol Ship
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...