மெட்ரோ ரயில் நிலையங்களில் செப்.1 முதல் பயண அட்டை மூலமே பார்க்கிங் கட்டணம் : பயணிகளுக்கு நோட்டீஸ் மூலம் முன் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் சாதாரண பயண அட்டை மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, பயணிகளுக்கு இதுகுறித்து நோட்டீஸ் மூலம் நிர்வாகம் முன் அறிவிப்பை செய்துள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் செல்வதற்காக வீடுகளில் இருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். இதற்காக வாகன கட்டணமும் நிர்வாகத்தினால் வசூல் செய்யப்பட்டது.  இருசக்கர வாகனத்திற்கு மாதாந்திர கட்டணம் அதிகபட்சம் 1,500 வரை வசூல் செய்யப்படுகிறது. இதேபோல், காருக்கு அதிகபட்ச கட்டணம் 3,000 வரையிலும் வசூல் செய்யப்படுகிறது. இந்த பார்க்கிங் கட்டணம் நிலையங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். பார்க்கிங் கட்டணத்தை  பணம் கொடுத்து செலுத்தி வந்தனர். பல மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளை தவிர பலரும் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றதால் இடநெருக்கடி ஏற்பட்டு வந்தது.  

எனவே, இந்த நடைமுறையை மாற்றி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மட்டுமே பார்க்கிங் செய்யும் வகையில், பார்க்கிங் கட்டணத்தை பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று கடந்த மாதம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இதற்கான சோதனை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பயண அட்டை மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து பார்க்கிங் வசதி உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நோட்டீஸ் மூலம் முன் அறிவிப்பு செய்துள்ளது.  இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறியதாவது: இந்த நடைமுறையின் காரணமாக ஒருநாள் பயண அட்டை, மாதாந்திர பயண அட்டை, டிரிப் கார்டு என மூன்று வகை பயண அட்டைகளை பயன்படுத்துபவர்கள் வாகனத்தை நிறுத்த முடியாத நிலை உள்ளது. சாதாரணமாக ₹100 கட்டணம் செலுத்தி பயண அட்டை பெற்று அதில் ரீசார்ஜ் செய்து மட்டுமே கட்டணத்தை செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதனால், 3 அட்டைகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்த திட்டம் நாள்தோறும் சலுகை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்பவர்களுக்கு பயன் தராது. இவ்வாறு கூறினர்.

Related Stories: