கோவளத்தில் அலைச்சறுக்கு போட்டி: வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் இந்திய சர்பிங் பெடரேஷன், கோவளம் சர்பிங் கிளப் ஆகியவை சார்பில் இந்திய அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. உலக அளவிலான 7வது ஆண்டு அலைச்சறுக்குப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி, விசாகப்பட்டினம், மங்களூர், கோவா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் ரியோனியன் தீவு ஆகிய நாடுகளில் இருந்தும் பிரபல அலைச்சறுக்கு வீரர்கள் வந்துள்ளனர்.  இருபது வயதுக்குட்பட்டோருக்கான அலைச்சறுக்கு போட்டி நேற்று நடந்தது.

இதில் கோவளம், மாமல்லபுரம் பகுதிகளைச் சேர்ந்த 20 சிறுவர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 20 சிறுவர்களும் பங்கேற்றனர். இன்று காலை மகளிருக்கும், மாலையில் இளைஞர்களுக்கும் அலைச்சறுக்கு போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்வதற்காக பிரபல கிரிக்கெட் வீரரும், அலைச்சறுக்கு வீரருமான ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இன்று இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கலந்து கொள்கிறார்.

Related Stories: