ரயில் டிக்கெட் முன்பதிவு போல நிமிடங்களில் லாரி தண்ணீரும் காலி: குடிநீர் வாரிய ஆன்லைன் புக்கிங்கில் குளறுபடி,..திண்டாடும் சென்னை மக்கள்

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் ‘டயல் பார் வாட்டர்’ முறையில் ஆன்லைன் முன்பதிவு மூலம் வழங்கப்படும் லாரி தண்ணீர் புக்கிங்கும் சில நிமிடங்களில் முடிந்து விடுவதால் லாரி தண்ணீர் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  சென்னையில் இந்த ஆண்டு வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை மக்கள் சந்தித்தனர். போர்வெல்களில் தண்ணீர் இல்லாததால் வீட்டு புழக்கத்துக்கு கூட தண்ணீர் இல்லாமல் பலர் ஊரை கூட காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வாடகை வீடுகளில் வசிப்பவர்களில் பலர் புறநகர் பகுதிகளுக்கு படையெடுத்தனர். அந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் சென்னையில் தலைவிரித்தாடியது.   சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால் மாற்று வழிகள் மூலம் சென்னை குடிநீர் வாரியம் குடிநீர் வழங்கி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதை நிறுத்திவிட்டு பொதுமக்களுக்கு லாரிகள் மூலமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சென்னையில் 12,000 நடைகள் வரை லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

 இதில், 2500 நடைகள் டயல் பார் வாட்டர் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களின் வீடுகளுக்கு கட்டண அடிப்படையில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் பஞ்சம் நிலவியதால் புக் செய்கிறவர்கள் லாரி தண்ணீரை பெற ஒரு மாதம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, பல இடங்களில் சென்னை குடிநீர் வாரியத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதிய சேவை திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்தது.  இதனால் புதிய சேவை திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் புக் செய்பவர்களுக்கு இரண்டு நாட்களில் லாரி தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் திட்டத்தை குடிநீர் வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டம் கடந்த ஜூலை 28ம்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

 இதன் மூலம் லாரி தண்ணீரை பெற ரயில் டிக்கெட்டை தட்கல் முறையில் முன்பதிவு செய்ய எப்படி குறிப்பிட்ட நேரத்துக்காக காத்திருப்போமோ அதேபோன்றுதான் இப்போது லாரி தண்ணீர் பெறவும் தயாராக வேண்டியிருக்கிறது. அதுவும் புக்கிங் சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் புக் பண்ணுவதற்காக ஆன்லைன் மூலம் மக்கள் நேரத்தை செலவழித்து வருவதுதான் மிச்சம். ஆனால் புக் ஆவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.  இதற்கு முன்பு ஆன்லைனில் புக் பண்ணும் போது உடனடியாக புக் பண்ணிவிடலாம். பின்னர் லாரி தண்ணீர் வரும் போது அவர்களிடம் கட்டணத் தொகையை கொடுக்க வேண்டும். ஆனால் எத்தனை நாட்களில் வரும் என்பதை சொல்ல முடியாது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவை திட்டத்தின்படி, புக் பண்ணும் போதே பணத்தையும் ஆன்லைனில் கட்ட வேண்டும். எந்த தேதியில் தண்ணீர் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

 திட்டம் என்னவோ, நல்ல திட்டம்தான் என்றாலும், ரயில்வே தட்கல் முன்பதிவை போன்று சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது. பின்னர் அடுத்தநாள் தான் முயற்சிக்க முடியும். எனவே ஏராளமானோர் முயற்சி செய்தும் லாரி தண்ணீருக்கு புக் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ‘லக்’ இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்றாகிவிட்டது. இதனால் புதிய சேவை திட்டம் மூலம் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.  இந்த முன்பதிவில் ஒரு நிமிடத்துக்கு 50 பேருக்கு புக் செய்யும் அளவுக்குதான் முன்பதிவு கெப்பாசிட்டி உள்ளது. இதனால் மிகவும் குறைவானவர்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

புதிய சேவையும்.. குறுக்கு வழியும்..

ஆன்லைன் மூலம் லாரி தண்ணீர் புக்கிங் செய்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:  சென்னையை பொறுத்தவரை இன்னும் தண்ணீர் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. குடிநீர் வாரிய லாரி தண்ணீரை வைத்துதான் மக்கள் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு முன்பு புக் பண்ணிவிட்டு எப்படியாவது அலைந்து திரிந்தாவது தண்ணீரை வாங்கிவிடுவோம். இப்போது அதற்கும் வழியில்லாமல் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். இது நல்ல திட்டம்தான் என்றாலும், ஆன் லைனில் புக் செய்ய பல நாட்கள் போராட வேண்டியுள்ளது. சிலமுறை பணத்தை எடுத்து விடுகிறது. ஆனால் புக் ஆகாமல் போய்விடுகிறது.  அந்த பணத்தை எப்படி திரும்ப வாங்குவது என்று தெரியவில்லை. புகார் எண்ணை தொடர்பு கொண்டால் ‘காத்திருங்கள்’ என்றுதான் பதில் வருகிறது. இதுதவிர குடிநீர் வரி அனைத்தும் செலுத்தியிருந்தால் மட்டுமே புக் பண்ண முடியும். இதனால் வாடகைதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிமையாளர் செல் நம்பருக்குதான் ‘ஓடிபி எண்’ வரும். இதனால் அவர்கள் ஆன்லைன் முன்பு உட்கார்ந்து வாடகைதாரர்களுக்காக லாரி தண்ணீர் புக் பண்ண முயற்சிக்க மாட்டார்கள்.

 இப்படி எல்லாம் பல பிரச்னைகள் உள்ளது. 9000 லிட்டர் தண்ணீருக்கு தினமும் காலை 10 மணி முதல் புக் பண்ணலாம். ஆனால் சில நிமிடங்களில் ‘டெலிவரி புல்’ என்று சொல்வதுடன் முடிந்துவிடுகிறது. பின்னர் அடுத்தநாள்தான் முயற்சிக்க முடியும். இப்படி எத்தனை நாள்தான் போராட முடியும். வெறுத்து போன மக்கள் பலர் பம்பிங் ஸ்டேஷன் ஊழியர்களையும், லாரி டிரைவர்களையும் கவனித்து தண்ணீரை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் இந்த புதிய சேவையில் லஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.  இப்படி குறுக்கு வழியில் தண்ணீரை பெற புக்கிங் எல்லாம் தேவையில்லை. ஆனால் அவர்கள் கேட்கும் தொகைதான் தலைசுற்ற வைக்கிறது.  இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories: