விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு தொகையை தவணை முறையில் தர எதிர்ப்பு: லோக் அதாலத்தை புறக்கணிக்க வக்கீல்கள் முடிவு

சென்னை: வாகன விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை தவணை முறையில் வழங்க எதிர்ப்பு தெரிவித்து லோக் அதாலத்தை புறக்கணிக்க வக்கீல்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. வாகன விபத்தில் பலியாகும் நபர்களின் குடும்பத்தினரும், படுகாயமடைந்து ஊனமானவர்களும் இழப்பீடு கோரி அதற்கான தீர்ப்பாயங்களில் வழக்கு தொடர்வார்கள். இதுபோன்ற வழக்குகளில்  இழப்பீடு தொகையை தருமாறு விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு தீர்ப்பாயங்கள் உத்தரவிடும். இதற்கு முன்பு இந்த தொகை இழப்பீடு கோருபவர்களின் வங்கிக் கணக்கில் முழுவதுமாக வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து வட்டியுடன் டெபாசிட் செய்யப்படும்.இந்நிலையில், ஒரு விபத்துக்கு 3 இழப்பீடுகள் கோரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீடு தொகையை தவணை முறையில் வழங்குமாறு தீர்ப்பாயங்களுக்கு உத்தரவிட்டது.

மேலும், இதுகுறித்து அனைத்து நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிவுறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தது. இந்த தீர்ப்பால் விபத்து இழப்பீடு பெறுபவர்கள் முழுத் தொகையையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வக்கீல்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள லா அசோசியேஷனின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் எல்.செங்குட்டுவன் தலைமையில் நேற்று நடந்தது.  கூட்டத்தில், “மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீட்டு தொகையை தவணை முறையில் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு தொகையை முழுமையாக வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும்வரை வாகன விபத்து இழப்பீடு தொடர்பாக வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் லோக் அதாலத்தில் வக்கீல்கள் பங்கேற்க கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வக்கீல் வி.எஸ்.சுரேஷ் கூறும்போது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வாங்கி மருத்துவம் பார்த்த குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை இதுபோன்று தவணை முறையில் தரப்பட்டால் அவர்கள் நிலை என்னாகும். வழக்கு தொடரும் ஏழை மக்கள் இந்த முறையால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.

Related Stories: