×

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம் : 20 முக்கியமான கேள்விகள் பட்டியல் என்னென்ன?

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரத்திடம் 20 முக்கியமான கேள்விகளை கேட்டு, சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் முறைகேடு குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், சிபிஐ எதிர்பார்த்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை (73) வரும் 26ம் தேதி வரையில் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுத்த நிலையில், வீட்டின் சுவர் ஏறி குதித்து, அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்தது. அன்றிரவு முதல் தொடர் விசாரணை நடந்து வந்தது. பல கேள்விகளுக்கு ப.சிதம்பரம் மழுப்பலான பதில்களை அளித்ததாக சிபிஐ தரப்பு கூறியது. இதையடுத்து நேற்று பிற்பகல் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்து வந்தனர். ப.சிதம்பரம் தரப்பில் வாதிட மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபில், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றம் சென்றனர். சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். விசாரணையில், சிபிஐ மற்றும் ப.சிதம்பரம் தரப்பு காரசார வாதங்களை முன்வைத்தது.

அதாவது, ‘வழக்கு விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்க வில்லை. 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்று சிபிஐ தரப்பு வலியுறுத்தியது. ஆனால், ‘சிபிஐ கேட்ட கேள்விகளையே கேட்கின்றனர். அனைத்திற்கும் ப.சிதம்பரம் பதில் அளித்துவிட்டார்.  விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதால், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று ப.சிதம்பரம் தரப்பு வாதிட்டது. இதையடுத்து ப.சிதம்பரம் நேரடியாக நீதிபதியிடம் பேசினார். இதைக் கேட்ட நீதிபதி, உத்தரவை அரை மணி நேரம் ஒத்திவைத்தார். பின்னர், ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தார். அதன்படி வரும் 26ம் தேதி வரையில், ப.சிதம்பரம் சிபிஐ காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நேற்று மாலை முதல், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில், முதற்கட்டமாக சில அடிப்படையான விஷயங்களை ப.சிதம்பரத்திடம் கேட்டறிந்த புலனாய்வு அதிகாரிகள், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான கேள்விகளை அடுக்கினர். இரவு 9 மணி வரை விசாரணை நடந்தது.

விசாரணையின் போது சிபிஐயின் மூத்த அதிகாரிகளுடன், சிபிஐ இயக்குனர் ரிஷி குமார் சுக்லாவும் உடன் இருந்துள்ளார். சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு, ‘சந்தேகமாக இருக்கிறது; தெரியவில்லை; பதில் சொல்ல முடியாது’ என்றே ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குமூலம் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக மிக முக்கியமான 20 முக்கிய கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்யும் வகையில், மேற்கண்ட கேள்விகள் அமைந்திருந்தன. ஒவ்வொரு கேள்விகளுக்கும் துணை கேள்விகளும் கேட்கப்பட்டன. அதில் சில முக்கியக் கேள்விகளின் விபரம் வருமாறு:

1. வெளிநாடுகளில் நீங்கள் சொத்துகள் வாங்குவதற்கான அடிப்படை வருவாய் என்ன?
2.  இங்கிலாந்து, ஸ்பெயின், மலேசியா போன்ற நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவிக்க எங்கிருந்து பணம் வந்தது?
3. பார்சிலோனா டென்னிஸ் கிளப் வாங்க எவ்வளவு பணம் செலவிடப்பட்டது, அது எங்கிருந்து வந்த பணம்?
4. உங்கள் மகன் கார்த்தி, ஏன் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் இருந்து பணம் பெற்றார்?
5. உங்களது மற்றும் உங்களது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்த போலி நிறுவனங்கள் விவரம் என்ன?
6. வெளிநாடு சார்ந்த போலி நிறுவனத்தின் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதுகுறித்த தங்களது கருத்து என்ன?
7. ஐஎன்எக்ஸ் மூலம் கிடைத்த வருமானத்தை எங்கு முதலீடு செய்தீர்கள்?
8. மத்திய நிதியமைச்சராக இருந்து கொண்டு விதிகளை மீறி அந்நிய செலாவணி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கியது ஏன்?
9. டெல்லி நார்த் பிளாக்கில் இந்திராணி முகர்ஜியை சந்தித்தது ஏன்?
10. ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு உதவிய வகையில் செஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜிக் நிறுவனங்கள் வழியாக கார்த்திக்கு பணம் அனுப்பியது உண்மையா?
11. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியிருக்கும் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியை உங்களுக்கு எப்படி தெரியும்?
12. ஏதேனும் ஒரு பத்திரிகையாளர் இந்திராணி முகர்ஜியுடன் உங்களை சந்திக்க வந்தாரா? அல்லது இந்திராணி முகர்ஜியிடம் இருந்து பணத்தை பெறுவதில் பத்திரிகையாளர் யாராவது உதவினார்களா?
13. உங்கள் மகன் கார்த்தியின் கட்டுப்பாட்டில் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு பணம் கைமாறியுள்ளது?
14. நீங்கள் நிதியமைச்சராக இருந்த போது, உங்களது செல்வாக்கை பயன்படுத்தி எப்ஐபிபி மூலம் பலதுறைகளிலும் உங்கள் மகன் ஈடுபட்டது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?
15. இந்திராணி கணவர் பீட்டர் முகர்ஜியை நீங்கள் சந்தித்தீர்களா?
16. ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் அனுமதி கொடுத்த வகையில், எந்தெந்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது?
17. இந்திராணியை தொடர்பு கொள்ளுமாறு மகன் கார்த்தியிடம் கூறியது உண்மையா?
18. கைதுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த பின் எங்கே இருந்தீர்கள்?
19. தலைமறைவாக இருந்த போது யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?
20. உங்களது செல்போன் எதற்காக சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது?
21. உச்சநீதிமன்றத்தில் இருந்து சென்றபோது, பாதி வழியில் நீங்கள் இறங்கியதாக உங்களது கார் ஓட்டுநர் மற்றும் கிளர்க் சொல்கின்றனரே? நீங்கள் எங்கு சென்றீர்? கைதில் இருந்து தப்பிக்க வெளியில் சென்றீர்களா?
22. சிபிஐ நோட்டீஸ் அனுப்பிய பின், ஏன் சிபிஐ முன் ஆஜராகவில்லை? என்பன ேபான்ற கேள்விகள் துருவி துருவி சுற்று வாரியாக கேட்கப்பட்டன. இந்த முக்கியக் கேள்விகளுடன் பல துணைக் கேள்விகளும் சிதம்பரத்திடம் எழுப்பப்பட்டது. விசாரணை முடிந்த பின், சிறிது நேரம் அவர் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுகிறது. பின்னர், சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அனைத்து கேள்விகளுக்கான விசாரணையும் சுற்றுகள் வாரியாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வருகிற 26ம் தேதி சிபிஐ காவல் முடிந்தவுடன் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் டெல்லி திகார் ஜெயிலில் ப.சிதம்பரம் அடைக்கப்படுவார் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்பின், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் விமான பேர வழக்கு போன்றவற்றில் அமலாக்கத்துறை முன் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டியவரும் என்பதால், அவரை புலனாய்வு அமைப்புகள் தங்களது விசாரணை முடியும் வரை, வெளியே அனுப்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 


Tags : INX Media Abuse Case,20 List , important questions
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...