×

டெல்லி, மும்பையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் வீடு அலுவலகங்களில் திடீர் ரெய்டு : அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி : ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான மும்பை வீடு, டெல்லியில் உள்ள அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெட் பிரிவிலேஜ் பிரைவேட் நிறுவனத்தின் அங்கமாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 49.9 சதவீத பங்கீட்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிறுவனராக பதவி வகித்து வந்த நரேஷ் கோயல், கடந்த மார்ச் மாதம் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் 17ம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக மூடப்பட்டது. நிதியை வேறு தொழில்களுக்கு திருப்பி விட்டது உட்பட பல்வேறு வகையான முறைகேடுகள் இந்த நிறுவனத்தில் நடைபெற்றதை மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் கடந்த ஜூலையில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்தது.

இதையடுத்து, அமலாக்கத் துறையினர் டெல்லி, மும்பையில் உள்ள நரேஷ் கோயலுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக கோயல் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து, கூடுதல் ஆதாரங்களை திரட்டுவதற்காக இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, சில நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம்  கோயலிடம் தீவிர முறைகேடு விசாரணை அதிகாரிகள் விசாரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு செல்லும் மனு வாபஸ்

18,000 கோடி நிதி மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நரேஷ் கோயல், கடந்த ஜூலை மாதம் வெளிநாடு செல்ல தனக்கு அனுமதி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி, கோயல் வெளிநாடு செல்ல விரும்பினால் நீதிமன்றத்தில் ரூ.18 ஆயிரம் கோடியை வைப்பு நிதியாக செலுத்தி விட்டு செல்லலாம் என கூறி, இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சமீபத்தில் மீண்டும் வெளிநாடு செல்ல அனுமதியளிக்க கோரி நீதிமன்றத்தில் புதிய மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.

இதை கோயல் திரும்ப பெற்றுள்ளார். இது தொடர்பாக கோயல் கூறுகையில், `‘என் மீதான ரூ.18,000 கோடி மோசடி விசாரணை நடைபெற்று வருதால், விசாரணை அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டியிருப்பதால் வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி கோரி அழுத்தம் தரமுடியாத நிலை உள்ளது. இதனால், வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை வாபஸ் பெறுகிறேன்,’’ என தெரிவித்தார்.  மனு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி நவீன் சாவ்லா தெரிவித்தார்.

Tags : ED suspects, Jet Airways diverted 25-30% ,bank loans overseas, smells underworld connection
× RELATED பெண் வாங்கிய விவசாய கடனை சொந்த...