மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படும் சானடோரியம் மேம்பாலம் : விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் மேம்பாலத்தில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால, வாகன ஓட்டிகள் விபத்து பீதியில் செல்கின்றனர். தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சிட்லபாக்கம், அஸ்தினாபுரம், கிழக்கு தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் சானடோரியம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதடைந்து பல நாட்களாக எரியாததால், இரவு நேரங்களில் மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.  இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், ‘நான் சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வருகிறேன். கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றேன். தினமும் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 8:30 மணியளவில் இந்த மேம்பாலம் வழியாகத்தான் வீட்டிற்கு செல்வேன். இந்த மேம்பாலத்தில் பலநாட்களாக மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி செல்ல சிரமமாக உள்ளது. மேலும் இரண்டு முறை நானே விபத்தில் சிக்கியுள்ளேன். அதுமட்டும் இன்றி தினமும் மேம்பாலம் வழியாக செல்லும்போது ஏதாவது ஒரு வாகன ஓட்டி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்’’ என்றார்.


Tags : Sanatorium overlooking ,darkness, light failures
× RELATED முதல்வர் பழனிசாமியுடன் திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு