அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தெருக்களில் ஆறாக ஓடும் கழிவுநீர்

அம்பத்தூர்: அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் 424 ஏக்கர் பரப்பளவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார்  10 ஆயிரம் குடியிருப்புகளும், சுமார் 3 ஆயிரம் வணிக வளாகங்களும் உள்ளன. மேலும் திருவள்ளுவர், மருதம் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட குடியிருப்பில் உள்ள கழிவுநீர் பல ஆண்டுகளாக அம்பத்தூர் ஏரியில்  கலந்து வந்தது. இதனால் ஏரி மாசு ஏற்பட்டு கூவம் போல மாறியது. இதன் காரணமாக சுற்றியுள்ள குடியிருப்புகளின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக, ஏரியில் விடப்பட்ட கழிவுநீர் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால்,  கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிநின்றது. இதனையடுத்து, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய பொதுமக்கள் பல போராட்டங்களுக்கு இடையே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து அயப்பாக்கம் அறிஞர் அண்ணா பூங்கா அருகில் சுமார் 17 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு நிலையத்தை அப்போதைய எம்எல்ஏ பீமாராவ் திறந்து வைத்தார். இதனை வீட்டுவசதி வாரியம்  பராமரிப்பு செய்து வந்தது.  இதன்பிறகு அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சமீப காலமாக அயப்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரி வர இயங்கவில்லை. இதற்கு, அதில்  கொள்ளளவை மீறி கழிவுநீர் விடுவதே காரணமாகும்.  இதனையடுத்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பல்வேறு  பகுதிகளில் கழிவுநீர் செல்ல முடியவில்லை. குறிப்பாக, இங்கு உள்ள 6வது வார்டில் பல தெருக்களில் பாதாள சாக்கடை சேம்பர் நிறைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இதனால்  பொதுமக்கள் தெருக்களில் கழிவுநீரில் கால் வைத்தபடி தான் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதன் காரணமாக, அவர்களது கால்களில் சேற்று புண் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.   மேலும், தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புகளில் படையெடுக்கின்றன. கழிவுநீர் வீடுகளை சூழ்ந்து நிற்பதால், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னல் அடைகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அயப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பி உள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரித்து கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அயப்பாக்கம் ஊராட்சியில், போதிய வருவாய் இல்லாததால், பாதாள சாக்கடை பராமரிப்பு, குடிநீர் வழங்கல், குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்ய முடியவில்லை. இதனால், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றியும், சுகாதார சீர்கேட்டாலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து, அயப்பாக்கம் ஊராட்சியை சென்னை  அல்லது ஆவடி மாநகராட்சியுடன் சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க முடியும் என்றனர்.

பற்றாக்குறை

சுத்திகரிப்பு நிலையம் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்திற்கு மட்டுமே கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 7 எம்.எல்.டி. சமீப காலமாக, இதனுடன் அம்பத்தூர், ஐ.சி.எப் காலனி ஆகிய இடங்களில் உள்ள வீட்டு வசதி வாரிய, குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களின் கழிவுநீரையும் விட்டு சுத்திகரிக்கின்றனர். இதனால் கொள்ளளவு பற்றாகுறையால், கழிவுநீர் சுத்திகரிக்க முடியாமல் வெளியேறி தெருக்களில் ஓடுகிறது.

Tags : Sewage flowing, streets,Ayapakkam Housing Board Apartments
× RELATED வருமான வரி சோதனையால் பீதி...