வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறி வாடிக்கையாளர் கணக்கில் 75 ஆயிரம் அபேஸ்

சென்னை: வடபழனி முத்து கோட்டம் 2வது தெருவை சேர்ந்தவர் மணி (48). இவரது செல்போனுக்கு கடந்த 19ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், ‘எஸ்பிஐ வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது கிரடிட் கார்டின் ரகசிய எண்ணை புதுப்பிக்க வேண்டும். எனவே, கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை கூறுங்கள்’’ என்றுள்ளார். மேலும், போனில் பேசியவர், மணியை பெயர் சொல்லி அழைத்ததால், வங்கியில் இருந்து பேசுவதாக நம்பிய அவர், தனது கிரெடிட் கார்டின் ரகசிய எண்ணை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், உங்களது வங்கி கணக்கில் இருந்து 75 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணி, உடனே சம்பவம் குறித்து வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* புதுவண்ணாரப்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கல்யாணி என்பரின் 3 சவரன் செயின், திருவொற்றியூரில் மேரி என்பவரின் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்ற சாத்தாங்காட்டை சேர்ந்த கார்த்திக் (23) என்பவரை, சிசிடிவி கேமரா பதிவு மூலம் போலீசார் கைது செய்தனர்.
* திருநின்றவூரை சேர்ந்த விக்கி (எ) தர் (17) என்ற சிறுவன், நேற்று அதிகாலை பேசின்பிரிட்ஜ் சட்டண்ணன் நாயக்கன் தெரு பகுதியில் பைக்கில் சென்றபோது, சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
* கடலூர் மாவட்டம், தர்மலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் (25), செங்குன்றம் அலமாதி அருகே ஆயில்சேரி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர், நேற்று காலை டிராக்டரில் செங்கற்களுடன் அலமாதி ஏரிக்கரை செங்காளம்மன் கோயில் அருகே சென்றபோது, திடீரென வலிப்பு வந்ததால் நிலை தடுமாறி டிராக்டரில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
* முகப்பேர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த நிர்மல் (18), அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த கேலட் பென்னி (18) ஆகிய இருவரும் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்ததும், இவர்கள் இருவரும் பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் ஏரி அருகே சென்றபோது, முன்னே சென்ற லாரி மீது பைக் மோதியதில் நிர்மல் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கேலட் பென்னி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
* மடிப்பாக்கம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த வெங்டேச சாஸ்திரிகள் (65),  ராஜேந்திரன் (57) ஆகியோர்  வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் தங்க நகைகள்,  கார் ஆகியவற்றை கொள்ளையடித்த  சேலத்தை சேர்ந்த பிரம்மமூர்த்தி (35)  என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி வினோத்  (28) என்பவரை தேடி வருகின்றனர்.
* திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (30), மணிகண்டன் (25) ஆகிய  இருவரும் நேற்று அதிகாலை பாடி மேம்பாலம் மீது பைக்கில் சென்றபோது அந்த  வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே  இறந்தார். படுகாயமடைந்த மணிகண்டனுக்கு மருத்துவமனையில்  சிகிச்சையளிக்கப்படுகிறது.
* அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, மதுரா  மேட்டூர், 2வது தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (52) என்பவர், நேற்று முன்தினம்  இரவு தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் இந்த பைக்  தீப்பற்றி எரிந்து நாசமானது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : 75 thousand Abs, customer account claiming,manager speaking from bank
× RELATED நாகை - வேளாங்கண்ணி பகுதியில் சாராயம்...