ஹேசல்வுட், கம்மின்ஸ் அபார பந்துவீச்சு 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா முன்னிலை

லீட்ஸ்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 67 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹெடிங்லி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 179 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. தொடக்க வீரர் வார்னர் 61 ரன் (94 பந்து, 7 பவுண்டரி), லாபஸ்ஷேன் 74 ரன் (129 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் டிம் பெய்ன் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். வார்னர் - லாபஸ்ஷேன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 111 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட், பிராடு 2, வோக்ஸ், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Advertising
Advertising

இரண்டாம் நாளான நேற்று, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது. ஹேசல்வுட், கம்மின்ஸ், பேட்டின்சன் வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஜோ ரூட் டக் அவுட்டானார். ஜோ டென்லி அதிகபட்சமாக 12 ரன் எடுக்க, இங்கிலாந்து 27.5 ஓவரில் வெறும் 67 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 5, கம்மின்ஸ் 3, பேட்டின்சன் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 112 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. அந்த அணி 14.1 ஓவரில் 52 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்ததால் ஆட்டம் பரபரப்பானது.

Related Stories: