ஜடேஜா உறுதியான ஆட்டம் இந்தியா 297 ரன் குவிப்பு

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், ரவீந்திர ஜடேஜாவின் உறுதியான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நார்த்சவுண்டு, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 44, அஜிங்க்யா ரகானே 81, விஹாரி 32 ரன் எடுக்க, அகர்வால் 5, புஜாரா 2, கேப்டன் கோஹ்லி 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ரிஷப் பன்ட் 20 ரன், ஜடேஜா 3 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பன்ட் 24 ரன் எடுத்து ரோச் வேகத்தில் ஹோல்டர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த இஷாந்த் ஷர்மா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஜடேஜா ஸ்கோரை நிதானமாக உயர்த்தினார். ஜடேஜா - இஷாந்த் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது.

இஷாந்த் 19 ரன் எடுத்து (62 பந்து, 1 பவுண்டரி) கேப்ரியல் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த முகமது ஷமி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். ஜடேஜா - பூம்ரா ஜோடி 10வது விக்கெட்டுக்கு 29 ரன் சேர்த்தது. ஜடேஜா 58 ரன் (112 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹோல்டர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஹோப் வசம் பிடிபட, இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (96.4 ஓவர்). பூம்ரா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் கெமர் ரோச் 4, ஷேனான் கேப்ரியல் 3, ரோஸ்டன் சேஸ் 2, ஜேசன் ஹோல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது.

Tags : Jadeja Strictly batting ,India 297 runs
× RELATED உலக கோப்பை பயிற்சி ஆட்டம் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி