உலக சாம்பியன்ஷிப் அரை இறுதியில் சிந்து

பாசெல்:  உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றதுடன் 5வது முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்தார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் சீன தைபே வீராங்கனை டாய் ட்ஸூ யிங்குடன் நேற்று மோதிய சிந்து 12-21, 23-21, 21-9 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்றார். முதல் செட்டை மோசமாக இழந்த அவர், 2வது செட்டில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு டாய் ட்ஸூ யிங்கின் சவாலை முறியடித்தது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன்ஷிப்பில் ஏற்கனவே 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள சிந்து, நடப்பு தொடரில் தனது 5வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் சாய் பிரனீத் (19வது ரேங்க்) 24-22, 21-14 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியை (4வது ரேங்க்) வீழ்த்தி அசத்தினார். 1983 உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரகாஷ் படுகோன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலக பேட்மின்டன் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை சாய் பிரனீத்துக்கு கிடைத்துள்ளது. அரை இறுதியில் அவர் நம்பர் 1 வீரர் கென்டோ மொமோட்டாவை (ஜப்பான்) சந்திக்கிறார்.

Related Stories: