மேட்டூர் உபரிநீர் பயன்பாட்டை அதிகரிக்க திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்க, அந்த திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த மாதம் 22ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ₹565 கோடியில் செயல்படுத்தப்படும். அத்திட்டத்தால் மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய நான்கு தொகுதி மக்கள் பயனடைவர் என்று தெரிவித்தார். உண்மையில், மேட்டூர் உபரிநீர் திட்டம் என்பது இன்னும் விரிவானதாகும். சேலம் மாவட்டத்திலுள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து, மேட்டூர் அணையின் உபரிநீரை நீரேற்று நிலையங்கள் மூலம் அந்த ஆறுகளுக்கு கொண்டு சென்று, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை காவிரி நீரை கொண்டு செல்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.  இத்திட்டத்தால் நேரடியாக 30,154 ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்வளம் மேம்படுவதன் மூலம் 18,228 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.

இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் விவசாயிகளும் பயனடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாமக ஏராளமான போராட்டங்களை நடத்தியது. 2008ம் ஆண்டு சேலத்தில் இந்த கோரிக்கையுடன் பாமக நடத்திய போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.  இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, 2017ம் ஆண்டு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அன்புமணி பிரசாரம் செய்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இத்திட்டத்தை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்ததுடன், பாமகவிடம் யோசனைகளையும் கேட்டார். அதை தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட மதிப்பீடுகளும் தமிழக அரசால் தயாரிக்கப்பட்டது.

தற்போது முதல்வர் அறிவித்துள்ள திட்டம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தின் சுருக்கம்தான். இத்திட்டத்தின் மூலம் 100 ஏரிகளில் காவிரி நீர் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் கூட, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி,  எடப்பாடி ஆகிய 4 தொகுதிகளில் பாசன நீர் தேவையை முழுமையாக நிறைவேற்றாது. இத்திட்டத்தை விழுப்புரம், கடலூர், திருச்சி மாவட்டங்கள் வரை நீட்டிக்கும் வகையில் மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: