2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை இந்திய - அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை தொடர்பாக, இருநாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலிபோர்னியாவில் நேற்று ஆலோசனை நடத்தினர். கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றபோது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இருநாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது, 2+2 பேச்சுவார்த்தை  என அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு இருநாட்டு வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ராணுவம் சார்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், இதன் 2வது பேச்சுவார்த்தை வரும் அக்டோபர் மாதம் வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இருநாடுகளையும் சேர்ந்த, இந்த துறைகளின் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இருநாடுகளையும் சேர்ந்த வெளியுறவு, பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள், கலிபோர்னியாவில் உள்ள மோண்டிரே நகரில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளர் கவுரங்கலால் தாஸ், பாதுகாப்பு அமைச்சக இணை செயலர் ஆனந்தராஜன், அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்புத் துறை உதவி செயலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் இருதரப்பு பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகளில் கடந்த முறை ஆலோசித்த பிரச்னைகள் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டது.

Related Stories: