கேரளாவின் முதல் ஆணவக்கொலை வழக்கில் இளம்பெண்ணின் அண்ணன் உட்பட 10 பேர் குற்றவாளிகள்: கோட்டயம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் ஆணவக் கொலை வழக்கில், பெண்ணின் அண்ணன் உட்பட 10 பேரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. கேரள  மாநிலம், கோட்டயம் அருகே உள்ள நட்டாசேரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன்  கெவின் ஜோசப் (24). பத்தனம்திட்டாவை சேர்ந்த சாக்கோ ஜான் என்பவரின் மகள்  மீனுவை காதலித்தார். இந்த காதல் விவகாரம் மீனுவின் பெற்றோருக்கு  தெரியவந்தது. கெவின் ஜோசப் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதால், காதலுக்கு பெண்  வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி கெவினும் மீனுவும் கடந்த ஆண்டு திருமணம் செய்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மே 26ம் தேதி மீனுவின் சகோதரர் ஷானு சாக்கோ  தலைமையிலான கும்பல், வீடு புகுந்து கெவினை காரில் கடத்தி சென்றது.  மறுநாள் தென்மலை அருகே உள்ள சாலியக்கரை ஆற்றில் கெவின் உடல்  மிதந்தது.  இந்த வழக்கில், மீனுவின் அண்ணன் ஷானு சாக்கோ, உறவினர்கள் மற்றும்  நண்பர்களான மியாஸ், இஷான், ரியாஸ், மனு முரளிதரன், ஷிபின், நிஷாந்த்,  டிட்டு ஜெரோம், பஸில், ஷானு, மீனுவின் தந்தை சாக்கோ ஜான், விஷ்ணு, ஷினு,  ரமீஸ் ஆகிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கோட்டயம்  மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த  நீதிமன்றம், ஷானு சாக்கோ, மியாஸ், இஷான், ரியாஸ், மனு முரளிதரன், ஷிபின்,  நிஷாந்த், டிட்டு ஜெரோம், பஸில், ஷானு ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என்று  தீர்ப்பு அளித்துள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் மீனுவின் தந்தை சாக்கோ ஜான்,  விஷ்ணு, ஷினு, ரமீஸ் ஆகிய 4 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 10 பேருக்கான தண்டனை விவரத்தை இன்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த கொலையை, ஆணவ கொலை என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே, குற்றவாளிகளுக்கு  அதிகபட்ச தண்டனை  கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வழக்குதான்  கேரளாவில் முதல் ஆணவக் கொலையாக பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த வழக்கின் தண்டனையை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: