300 கோடி மோசடி வழக்கில் சிறையில் உள்ள நிதி நிறுவன அதிபரை கைது செய்ய நடவடிக்கை: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: 300 கோடி மோசடி வழக்கில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் சிறையிலுள்ள நிதி நிறுவன அதிபரை கைது செய்து, மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டியைச் சேர்ந்த பொன்.ராஜேந்திரன்,  ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: டெல்லி மற்றும் ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்ட ‘எச்பிஎன் டெய்ரி அலய்ட்’ என்ற நிறுவனத்தின் சார்பில் நாடு முழுவதும் பொதுமக்களிடம் டெபாசிட் வசூலிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரிடம் ₹300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, முதிர்வுத்தொகையை ெடபாசிட்தாரர்களுக்கு திருப்பி தரவில்லை. இதுதொடர்பான புகாரின்பேரில், நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அமன் தீப் சிங் சரண், கைது செய்யப்பட்டு சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2015ல் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கின் விசாரணை மதுரை பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடந்து வருகிறது. ஆனால், நிறுவனத்தின் மேலாளரை கைது செய்து ஆஜர்படுத்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தமிழக டெபாசிட்தாரர்களின் முதலீட்டு பணத்தை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ராய்ப்பூர் சிறையிலுள்ள நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அமன் தீப் சிங் சரணை கைது செய்து, தமிழகம் கொண்டு வந்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, முதலீட்டு பணத்தை மீட்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தேன். அதில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ராய்ப்பூர் நீதிமன்றத்தில் உரிய மனு செய்து, 2 மாதத்திற்குள் அமன்தீப்சிங் சரணை கைது செய்து, மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி இதுவரை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. எனவே, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி வீ.பாரதிதாசன் விசாரித்தார். அப்போது போலீசார் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அமன்தீப் சிங்கை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது தொடர்பாக, ராய்ப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டுள்ளது. விரைவில் நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை, தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: