பயிர் காப்பீடு முறைகேடு குறித்து புகார் செய்த மார்க்சிஸ்ட் செயலாளருக்கு பகிரங்க கொலை மிரட்டல்: இளையான்குடியில் பரபரப்பு

இளையான்குடி: இளையான்குடியில்  பயிர் காப்பீடு முறைகேடு குறித்து புகார் செய்த மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, கொடிமங்கலத்தை சேர்ந்தவர் அழகர்சாமி(62). மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர். நேற்று முன்தினம் அழகர்சாமியின் வீட்டிற்கு நாகமுகுந்தன்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், மனைவி தமிழ்ச்செல்வி வந்தனர். அப்போது அழகர்சாமி வீட்டில் இல்லை. எனவே அவரது மனைவி ராஜேஸ்வரியிடம், அழகர்சாமியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து ராஜேஸ்வரி புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறுகையில், ‘‘இளையான்குடி தாலுகா திருவள்ளூர்,  பனைக்குளம், நாகமுகுந்தன்குடி ஆகிய பகுதிகளில் கடந்த 2018-19ம் ஆண்டு விவசாயிகள் பெயரில் பல லட்சம் பயிர் இன்சூரன்ஸ் மோசடி  செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. தாலுகா செயலாளர் அழகர்சாமி முறைகேடு குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.  தற்போது இந்த வழக்கை  மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்தான், அழகர்சாமியின் வீட்டிற்கு சென்று கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்’’ என்றனர்.

Related Stories: