புதுச்சேரி சட்டசபை 26ல் கூடுகிறது: துணை சபாநாயகர் பதவிக்கு எம்என்ஆர் பாலன் போட்டி

புதுச்சேரி: புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் கூடும் நிலையில் துணை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி தரப்பில் எம்என்ஆர் பாலனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவதற்கு நேற்று நிதியமைச்சகம் ஒப்பதல் வழங்கியது. இதையடுத்து, அந்த கோப்பு மத்திய உள்துறையிடம் சென்றுள்ளது. அங்கு ஓரிரு நாளில் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டெல்லி சென்ற முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் இன்று புதுச்சேரி திரும்புகின்றனர்.  நாளை மறுநாள் (திங்கள்) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூட்டம் மீண்டும் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று மதியம் சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் வெளியிட்டார். சபை தொடங்கியதும் அலுவல் குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்பதை முடிவு செய்து அறிவிக்கும். இந்த கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

 இதனிடையே காலியாக உள்ள புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை சட்டசபை கூடும் முதல் நாளிலே சபாநாயகர் மூலம் வெளியிட்டு 29ம்தேதிக்குள் நடத்தி முடிக்க ஆளுங்கட்சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. சபாநாயகர் வைத்திலிங்கம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்த பதவிக்கு துணை சபாநாயகர் சிவகொழுந்து தேர்வு செய்யப்பட்டார். இதனால், காலியான துணை சபாநாயகர் பதவிக்கு உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எம்.என்.ஆர்.பாலன் பெயர் பரிசீலனையில் உள்ளது.  சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டதும், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் போட்டியிட மனு அளிக்காத பட்சத்தில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. எனவே இதற்கான போட்டியில் எதிர்க்கட்சிகள் களமிறங்குமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அவ்வாறு போட்டி வேட்பாளரை நிறுத்தினால் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்ேற தெரிகிறது.

Related Stories: