×

70 ஆண்டு இல்லாத பொருளாதார வீழ்ச்சி எதிரொலி மத்திய அரசு சலுகைகள் அறிவிப்பு,..தொழில் முதலீடுகளுக்கு வரி குறைப்பு ,..ஜிஎஸ்டி வரி ரீபண்ட் எளிமையாக்கப்படும்

* பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி
* வீடு, வாகன கடன் வட்டி குறைக்கப்படும்
* நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

புதுடெல்லி: நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானதும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், தொழில் முதலீடுகளுக்கு வரி குறைப்பு, வீடு, வாகன கடன் வட்டி குறைப்பு உட்பட பல்வேறு சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.  இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலை நிலவுகிறது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் நேற்று முன்தினம் கூறினார். இதை சரி செய்ய அரசு சில பொருத்தமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இவர் இதை கூறுவதற்கு முன்பாகவே, ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5.8 சதவீதமாக குறைந்ததற்கு, தொழில்துறை உற்பத்தி குறைந்ததே காரணம் என மூடிஸ் நிறுவனம் தெரிவித்தது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற கடுமையான நடவடிக்கைகள்தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலை பற்றியும், அதை மேம்படுத்த எடுக்கப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றியும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியின்போது, பொருளாதார மந்தநிலையை சீர்படுத்துவதற்கான பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

* தற்போது ஜிடிபி வளர்ச்சி சர்வதேச அளவில் 3.2 சதவீதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  வளர்ச்சி அடைந்த பொருளாதார நாடுகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
* அமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்ட வர்த்தக போர் காரணமாக சீன கரன்சியின் மதிப்பு குறைந்துள்ளது. சர்வதேச சந்தையிலும் மோசமான நிலை நிலவுகிறது.
* நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க, கடந்த 2014ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீர்திருத்தங்களை நாங்கள் மறக்கவில்லை. அவை தொடரும்.
* இந்தியாவின் பொருளாதாரம், உலகின் மற்ற நாடுகளை விட சிறப்பாக உள்ளது.
* வருமானவரி ஆய்வுகள், இந்த ஆண்டு விஜயதசமி முதல் முகம் அறியா முறையில் மேற்கொள்ளப்படும். இதனால், வருமான அதிகாரிகளின் நேரடி தொந்தரவு இருக்காது. வருமானவரித் துறையின் அனைத்து நோட்டீசுகளும், சம்மன்களும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே இடத்தில் இருந்து கம்யூட்டர் மூலம் அனுப்பப்படும்.
* சந்தையில் அன்னிய முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், நிதித்துறை சட்டப்படி விதிக்கப்பட்ட கூடுதல் வரியை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். நீண்ட கால மற்றும் குறுகிய கால முதலீட்டு ஆதாயத்துக்கான கூடுதல் வரி திரும்பப் பெறப்படும்.  இதில், பட்ஜெட்டுக்கு முந்தைய நிலை மீண்டும் பின்பற்றப்படும்.
* புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு விதிக்கப்படும் ஏஞ்சல் வரியையும் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சந்திக்கும்
பிரச்னைகளை தீர்க்க தனி பிரிவு தொடங்கப்படும்.
* பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு ரூ.70 ஆயிரம் கோடி நிதி அளித்து, பணப்புழக்கம் அதிகரிக்கப்படும்.  
* இந்திய சந்தையில் ரூ.5 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டு பணப்புழக்கம் அதிகரிக்கப்படும்.
* ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி சலுகையை, கடன்தாரர்களுக்கு அளிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதன் மூலம் வீட்டுக்கடன், வாகன கடன்களுக்கான வட்டிகள் குறைக்கப்படும்.
* தொழில்துறையைச் சார்ந்த பலருடன் நான் ஆலோசனை நடத்தி அவர்களின் தேவைகளை புரிந்து கொண்டுள்ளேன்.
* நிலுவையில் உள்ள அனைத்து ஜிஎஸ்டி ரீபண்ட் பணமும் 30 நாட்களில் செலுத்தப்படும்.
* லாபகரமாக இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், 3 ஆண்டு சராசரி நிகர லாபத்தில் குறைந்தப்பட்சம் 2 சதவீதத்தை, சமூக பொறுப்புணர்வுடன் நலத்திட்ட பணிகளுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறைகள் மீறப்பட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது. வளங்களை உருவாக்குபவர்களை மத்திய அரசு மதிக்கிறது.
* 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வாங்கப்படும் பிஎஸ்-4 ரக வாகனங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். அரசுத்துறைகள் பழைய வாகனங்களை மாற்றிக் கொள்ளலாம்.
* அடுத்த கட்ட அறிவிப்புகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

ராகுல் குற்றச்சாட்டு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது என காங்கிரஸ் நீண்ட காலமாகவே எச்சரிக்கை விடுத்து வந்தது. தற்போது, மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்களே, இந்திய பொருளாதாரம் மோசமாக உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர். அதனால், நாங்கள் சொல்லும் தீர்வை ஏற்றுக் கொள்ளுங்கள். பேராசைக்காரர்களிடம் பணத்தை கொடுக்காமல், தேவைப்படுபவர்களின் கையில் பணத்தை கொடுங்கள்,’ என கூறியுள்ளார்.



Tags : Economic downturn, central government, industry investment, tax cut, GST tax rebate
× RELATED கள்ளக்காதலிக்காக நடந்த கொடூரம்...