திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் 2 ஆயிரம் ஆண்டு முந்தைய ‘பானை ஓடு’ கண்டெடுப்பு

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பிரபு மற்றும் சிவசந்திரகுமார், ஆய்வு மாணவர்கள் சரவணன், சந்தோஷ் ஆகியோர் ஏலகிரிமலையில் உள்ள குண்டுரெட்டியூர் காட்டில் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான குறியீட்டுடன் கூடிய பானை ஓடு மற்றும் புழங்கு பொருட்களை கண்டெடுத்துள்ளனர்.

Advertising
Advertising

இதுகுறித்து உதவி பேராசிரியர் பிரபு கூறியதாவது: திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் உள்ள மலையடிவார கிராமம் குண்டுரெட்டியூர். இங்கு கடந்த ஆண்டு ஆய்வின்போது பல தொல்லியல் தடயங்கள் கிடைத்தது. அப்பகுதியில் தற்போது விவசாய நிலத்தில் உழவுப்பணிகள் நடப்பதால், 2ம் கட்ட ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, உடைந்த சுடுமண் புகைப்பான், குறியீடுடன் கூடிய கருப்பு சிவப்பு பானை ஓடு, எஞ்சிய தந்தத்தின் துண்டு, நெசவு ‘தக்ளி’, சுடுமண் மணிகள், வண்ண களிமண் ஜாடிகளின் கைப்பிடி, சுடுமண் தாங்கிகள் ஆகியவை கிடைத்தது.

இதில் முக்கிய பொருளாக உள்ள பானை ஓட்டில் அரிய வகை குறியீடு கீறப்பட்டு வண்ண சாந்துகளால் கோடுகள் வரையப்பட்டுள்ளது. அதன் பொருள் உறுதியாக கூற முடியவில்லை. கருப்பு சிவப்பு நிறமுள்ள பானை ஓடு சங்ககாலத்தை சேர்ந்த மக்கள் புழங்கியதற்கானது. இது 2 ஆயிரம் ஆண்டு பழமையானது. மேலும் அப்பகுதியில் நெசவு தொழில் செய்தவர்கள் இருந்ததற்கு சான்றாக கையாலே நூல் நூற்கும் ‘சுடுமண் தக்ளி’யும் உள்ளது. அதேபோல் அங்குள்ளவர்கள் யானை தந்தத்தால் ஆபரணம் அணிந்தனர் என்பதன் அடையாளமாக தந்தத்தின் ஒரு சிறிய துண்டு கிடைத்துள்ளது.

இந்த பானைக் குறியீட்டில் உள்ள கீறல் முதலை, மீன், ஆமை ஆகியவற்றில் ஒன்றை குறிப்பதாகவும். இது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் என தொல்லியல்துறை முன்னாள் இயக்குனர் பூங்குன்றன் கூறினார். இப்பகுதியில் கிடைக்கும் சான்றுகள் அனைத்தும் தொல்லியல் துறை இங்கு முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. எனவே, வடதமிழகத்தின் தொன்மை, தமிழர்களின் வாழ்வியலை உணர்த்த தமிழக அரசும், தொல்லியல் துறையும் இப்பகுதியில் விரைவில் ஆய்வு செய்யவேண்டும் என வரலாற்று பேராசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான சேகர் தெரிவித்தார்.

Related Stories: