ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முதன்முறையாக ‘ஜி9’ வாழை நாற்றுகள் விற்பனை

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள திசு வளர்ப்பு கூடம் மூலம் முதன்முறையாக உற்பத்தி செய்யப்பட்ட வாழை நாற்றுகள் விற்பனை துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு மூலிகை நாற்றுகள், காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குள்ள 12 பூங்கா மற்றும் பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள திசு வளர்ப்பு கூடத்தில் இதுவரை ஆர்கிட் மற்றும் மலர் செடிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. தற்போது வாழை மற்றும் ஸ்ட்ராபெரி போன்றவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழை நாற்றுகள் முதன்முறையாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது 2 ஆயிரம் நாற்றுகள் இந்த திசு வளர்ப்பு கூடம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தாவரவியல் பூங்காவில் உள்ள திசு வளர்ப்பு கூடத்தில், முதன்முறையாக வாழை மற்றும் ஸ்ட்ராபெரி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வாழை நாற்றுகள் விற்பனைக்கும், நடவு பணிகளுக்கும் தயார் நிலையில் உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கிச் செல்லலாம். தற்போது சோதனை முயற்சியாக 2 ஆயிரம் நாற்றுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதை தோட்டக்கலை பண்ணைகளிலும் நடவு செய்ய உள்ளோம். மீதமுள்ள நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். நாற்று ஒன்று ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பலர் வாங்கிச் செல்கின்றனர். சமவெளிப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், வாழை நாற்றுகள் வேண்டும் என்று கேட்டால், பல லட்சம் நாற்றுகள் என்றாலும், அவர்களுக்கு உற்பத்தி செய்து தரப்படும். தற்போது ஜி9 எனப்படும் பச்சை வாழை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது, என்றார்.

Related Stories: