வரும் 26ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. செப்.7ம் தேதி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சுந்தரேஸ்வரர் நடத்திய திருவிளையாடல்களை விளக்கும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா வரும் 26ம் தேதி காலை 7.35 மணிக்கு மேல், சுவாமி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் பட்டர்களால் கொடியேற்றப்பட்டு கோலாகலமாக துவங்க உள்ளது. கொடியேற்றத்துக்கு பின் தீபாராதனை நடைபெறும். மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர். செப்.7ம் தேதி சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.

செப்.9ல் நடையடைப்பு

செப். 9ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி புட்டுத்தோப்புக்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். இரவு 9.30 மணியளவில் மீண்டும் கோயிலுக்கு எழுந்தருள்வர். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மட்டும் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று, ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்வையிட்டு தரிசிக்கலாம்.

விழாவின் முக்கிய நிகழ்வுகள்

* செப். 1 - கருங்குருவிக்கு உபதேசம்
* செப். 2 - நாரைக்கு மோட்சம் அருளிய லீலை
* செப். 3 - மாணிக்கம் விற்ற லீலை
* செப். 4 - தருமிக்கு பொற்கிழி அருளிய லீலை
* செப். 5 - உலவாக்கோட்டை அருளியது
* செப். 6 - பாணனுக்கு அங்கம் வெட்டியது
* செப். 7 - வளையல் விற்ற லீலை, சுவாமி பட்டாபிஷேகம்
* செப். 8 - நரியை பரியாக்கிய லீலை
* செப். 9 - பிட்டுக்கு மண் சுமந்த லீலை
* செப். 10 - விறகு விற்ற லீலை
* செப். 11 - சட்டத்தேர் எழுந்தருளல்
* செப். 12 - பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தவாரி

Tags : Meenakshi Amman Temple
× RELATED மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்: இன்று காலை நடந்தது