சாயல்குடி பகுதியில் சேதமடைந்த தானிய உலர்களம்

சாயல்குடி: கடலாடி, சாயல்குடி பகுதியில் தானியங்களை உலர்த்தும் உலர்களம் சேதமடைந்து கிடப்பதால், புதிதாக அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி, சாயல்குடி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாளாக உள்ளது. சுமார் 5000 ஹெக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. நெல், மிளகாய், பருத்தி, மல்லி, நிலக்கடலை போன்றவை விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் கடலாடி ஒன்றியத்திலுள்ள 60 பஞ்சாயத்துகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் தானியங்களை காயப்போடுதல், பிரித்தெடுத்தலுக்கு பயன்படும் உலர்களம் கட்டமைப்பு கட்டப்பட்டது. இப்பகுதியில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நல்ல விளைச்சல் வந்து கொண்டிருந்தது. ஆனால் 10 வருடங்களாக தொடர் வறட்சியால் தொடர்ந்து விவசாயம் பொய்த்து வருகிறது. இதனால் கிராமங்களில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட தானிய உலர்களங்கள் சேதமடைந்து கிடக்கிறது. அதனை சீரமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

இதுகுறித்து கொண்டுநல்லான்பட்டி விவசாயிகள் கூறும்போது, ‘‘இங்கு 300க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் கரிசல் மண், வண்டல் மண் விவசாய நிலங்கள் அதிகம். இதனால் நெல்லுக்கு அடுத்தப்படியாக மிளகாய், மல்லி அதிகளவில் பயிரிடப்படப்படுகிறது. இதனை கிராமத்தில் அமைக்கப்பட்ட உலர்களத்தில் வைத்து, காய வைத்து தரம் பிரித்து வந்தோம். ஆனால் உலர்களம் கட்டமைப்பு சேதமடைந்து கிடப்பதால், கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சீரமைக்காததால் கட்டுமானங்கள் சேதமடைந்தது. இதனால் சாலையில் போட்டு பிரித்தெடுக்கிறோம், இதனால் விபத்து அச்சத்துடன் வேலை பார்க்கும் நிலை உள்ளது. அதிக வாகனங்கள் வந்து செல்வதால், தானியங்கள் மாசு படுகிறது. எனவே கிராமத்தில் உள்ள உலர்களத்தை அகற்றி விட்டு, புதிதாக உலர்களம் அமைக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: