கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து இளம்பெண், சிறுவன் பலி

கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் 100 அடி பள்ளத்தில் இன்று அதிகாலை ஆம்னி வேன் உருண்டு விபத்துக்குள்ளானதில் இளம்பெண் மற்றும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா(41). இவரது மகன் ராசிக் பரித்(13). அதே பகுதியை சேர்ந்த சாதிக்(41) என்பவரின் மகள் ரூபிதா ஷெரின்(18). உறவினர்களான ரஹ்மத்துல்லா, சாதிக் ஆகியோர் கொடைக்கானல் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரஹ்மத்துல்லா, சாதிக் ஆகியோர் மகன், மகளுடன் வத்தலக்குண்டுவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நள்ளிரவு ஆம்னி வேனில் கொடைக்கானலுக்கு புறப்பட்டனர்.

ஆம்னி வேனை ரஹ்மத்துல்லா ஓட்டி வந்துள்ளார். அதிகாலை 2.30 மணியளவில் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே, கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன் சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூபிதா ஷெரின், ராசிக் பரித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காயங்களுடன் வேனில் சிக்கியிருந்த ரஹ்மத்துல்லா, சாதிக் ஆகியோரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இளம்பெண் மற்றும் சிறுவன் பலியான சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>