வேலூர் மேல்மொணவூர் பாலாற்றில் இன்று முதல் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பணி தொடங்கியது

வேலூர்: வேலூர் மேல்மொணவூர் பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பணி இன்று முதல் தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. இதனால் மாவட்டம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானப்பணிகள் முடங்கியது. இதற்கிடையில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மேல்மொணவூர் பகுதியில் மாட்டு வண்டிகளிலும் விரிஞ்சிபுரம் அருகே லாரிகளில் மணல் அள்ள அனுமதி வேண்டி மாவட்ட நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்திடம் விண்ணப்பித்தது. மாட்டு வண்டியில் மட்டும் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேல்மொணவூர் பாலாற்றில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பணி இன்று தொடங்கியது. இதற்காக அதிகாலை 3 மணியளவில் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் பாலாற்றில் குவிந்தனர். பின்னர் ஒவ்வொரு மாட்டு வண்டிக்கும் பில் போட்டு மணல் அள்ள அனுமதி அளித்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மேல்மொணவூர் அருகே பாலாற்றில் மாட்டு வண்டியில் மட்டும் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குவாரி இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. ஒரு மாட்டு வண்டிக்கு கால் யூனிட் மணல் மட்டுமே நிரப்ப முடியும். ஒரு மாட்டு வண்டிக்கு கட்டணமாக ₹100ம், ஜிஎஸ்டி வரி ரூ.5 என சேர்த்து மொத்தம் ரூ.105 வசூலிக்கப்படுகிறது. இந்த குவாரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். ஒரு ஆண்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 500 கனமீட்டர் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் குவிந்துவிடுவார்கள் என்பதால் ஒரு நாளைக்கு ஒரு ஊர் என்ற அடிப்படையில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இன்று முதல்நாள் என்பதால் மேல்மொணவூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 3 நாட்களுக்கு பிறகுதான் மீண்டும் மணல் அள்ள அனுமதி. நாளை வேலூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் அடுத்த நாள் திருமணி மற்றும் சுற்றியுள்ளவர்களுக்கும் மணல் வழங்கப்படும். இதேபோல் சுழற்சி முறையில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும். ஒரு நாளுக்கு ஒரு மாட்டு வண்டிக்கு ஒருமுறை மட்டுமே பில் போடப்படும். முறைகேடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: