காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார் டிரம்ப்: வெள்ளை மாளிகை அதிகாரி தகவல்

வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என சர்வதேச சமூகத்திற்கு இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்த உண்மையை பாகிஸ்தானும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா அறிவுறுத்தி இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்தியஸ்தம் செய்யத் தாயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியபோது அது இருதரப்பு பிரச்சனை என்றும் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கு இடமில்லை என்றும் இந்தியா தெளிவுபடுத்தியது. இந்நிலையில் ஜி 7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின் போது காஷ்மீர் தொடர்பான தன்னுடைய எண்ணத்தை பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்க டிரம்ப் விரும்பலாம் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

காஷ்மீர் நிலவரம் குறித்து அதிபர் டிரம்ப் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பும் விரும்பினால் பதற்றத்தை தனிப்பதில் உதவ டிரம்ப் தயாராக இருப்பதாகவும் அந்த வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். அதே சமயம் மத்தியஸ்தம் தொடர்பாக இந்தியா எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத இயக்கங்களை ஒடுக்க வேண்டும், எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பாகிஸ்தானை வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோடி உடனான சந்திப்பின் போது இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை டிரம்ப் வலியுறுத்த வாய்பிருப்பதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி உடனான சந்திப்பை டிரம்ப் ஆவலோடு எதிர் நோக்கி இருப்பதாகவும், இந்த சந்திப்பின் போது பாதுகாப்புத்துறை, தீவிரவாத ஒழிப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பாக பேசப்படும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி கூறியுள்ளார்.

Related Stories: