காங்கிரஸ் எச்சரித்ததை பாஜக அரசின் பொருளாதார ஆலோசர்களே தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்: நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல் ட்வீட்

புதுடெல்லி: காங்கிரஸ் எச்சரித்ததை பாஜக அரசின் பொருளாதார ஆலோசர்களே தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர் என்று நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நீண்ட காலமாக நாங்கள் எச்சரித்து வந்ததை அரசாங்கத்தின் சொந்த பொருளாதார ஆலோசகர்களே இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவின் பொருளாதார நிலை படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. பேராசை கொண்டவர்களுக்கு அல்லாமல், பணத்தை ஏழை மக்களிடம் அளிக்கும் தங்களின் தீர்வை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, இந்திய பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரம் தற்போது பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், இதனை சரிசெய்ய சாதாரன நடவடிக்கைகள் போதுமானதாக இருக்காது எனவும் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இது போன்ற நிதி நெருக்கடியை இந்தியா சந்தித்தது இல்லை என்றும், ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி நெருக்கடி ஏற்பட யாரும் யாரையும் நம்பும் நிலையில் இல்லை என்று தெரிவித்திருக்கும் அவர் தனியார் துறையினருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களையும், பிரச்சனைகளையும் தீர்க்க மத்திய அரசு ஏதேனும் செய்தாக வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமாரின் கருத்துகளை மேற்கோள்காட்டி, ராகுல் காந்தி தனது கருத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: