ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கைது தடையை நீட்டிக்கக்கோரிய ப.சிதம்பரம், கார்த்திக் மனு மீது செப்டம்பர் 3ல் உத்தரவு

புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் மனு மீது செப்டம்பர் 3ல் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கை செப்டெம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாக கூறி, கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறைக்கு எதிராக தொடர்ந்த முன் ஜாமின் மனுவை இன்று விசாரணை செய்தது.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் வழங்கியதோடு 26-ம் தேதி வரை கைது செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ப.சிதம்பரம் மீது தொடரப்பட்ட மற்றொரு வழக்கான ஏர்செல் மேக்சிஸ் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் தொடர்பான பணப்பரிவர்த்தனை, அந்நிய முதலீட்டில் மோசடி நடைபெற்றதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைது செய்யாமல் இருப்பதற்காக சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் தரப்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவானது தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே, தொடர்ச்சியாக இந்த மனு விசாரிக்கப்பட்டு வந்தபொழுது கைது செய்வதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடிக்க கூடாது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இருவரையும் கைது செய்ய தடை இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும், இன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி ஓ.பி.ஷைனி முன்ஜாமின் மீதான உத்தரவை செப்டம்பர் 3ம் தேதி பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்து வழக்கை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். மேலும் அதுவரை இருவரையும் கைது செய்ய தடை விதிக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

Tags : Aircel-Maxis case, PC Chidambaram, Karthik, petition, Delhi, CBI Special Court
× RELATED எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு:...