கேரளாவில் கொலை செய்து விட்டு தப்பிய இளைஞர்கள் இருவர் சேலத்தில் கைது

சேலம்: கேரளாவில் கொலை செய்து விட்டு ரயில் மூலம் தமிழகத்திற்கு தப்பி வந்த கேரள இளைஞர்கள் இருவரையும் சேலம் சந்திப்பில் வைத்து ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நான்கு இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தமிப் கான் என்ற இளைஞரை மற்ற மூன்று இளைஞர்களும் சேர்ந்து பியர் பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட கேரள போலீசார் சியாத் என்பவனை கைது செய்து விசாரித்ததில் கொலையில் தொடர்புடைய மேலும் இருவர் ரயில் மூலமாக தமிழக பகுதிக்கு தப்பி சென்றது தெரியவந்தது.

இதை அடுத்து தப்பி சென்ற இருவரது செல்போன் சிக்னல்களை  டிராக் செய்து  அவர்கள் பயணிக்கும் வழித்தடத்தை கண்டுபிடித்த கேரள போலீசார், அவர்களை கைது செய்ய உதவுமாறு பாலக்காடு, கோவை, ஈரோடு  மற்றும் சேலம் ரயில்வே போலீசாரை கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் கேரளாவிலிருந்து பெங்களூர் செல்லும் ஆலப்புழா விரைவு ரயில் சேலம் சந்திப்புக்கு வந்த போது அங்கிருந்த ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அதில் தேடப்பட்டு வந்த இளைஞர்கள் இருவரையும் அடையாளம்  கண்டு கைது செய்த சேலம் ரயில்வே போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து சேலம் வந்த கேரள போலீசாரிடம் கைது செய்யப்பட்ட இருவரையும் ஒப்படைத்தனர்.

Tags : Kerala, killed, young, two, Salem, arrested
× RELATED துபாயில் கட்டிடத்தில் இருந்து கேரள வாலிபர் விழுந்து பலி