பாசன நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையை மேற்கொள்ள வேண்டும்: விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: பாசன நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா விவசாயிகள் காவிரி நீரை ஆதாரமாக கொண்டு ஆண்டுதோறும் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 13ம் தேதி நீர் திறக்கப்பட்ட நிலையில் அந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும். அதேபோல், கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி விதைப்பு முறையில் விவசாயிகள் ஈடுபட வேண்டும்.

நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடியை மேற்கொள்வதால் சுமார் 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் சேமிக்க படுவதோடு நெல் பயிர் 10 முதல் 15 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடைக்கு தயாராகி விடும் என்ற அடிப்படையில் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சி.ஆர். 1009, சி.ஆர். 1009 சப் 1, கோ 50, ஏடிடி 50, டி.கே.எம் உள்ளிட்ட 13 நெல் ரகங்களின் விதைகளை போதுமான அளவில் இருப்பில் வைக்க வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நேரடி நெல் விதைப்பை ஊக்குவிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.600 உழவு ஊதியமாக வழங்கப்படும். 5 லட்சம் ஏக்கர் பரப்பு விவசாயத்துக்கு உழவு மானியம் வழங்குவதற்காக தமிழக அரசு நிதி ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்கண்ட உழவு மானியத்தை பெற்று, நீரை சேமித்து, அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: