தீவிரவாதிகள், சந்தேக நபர்கள் புகைப்படம் எதையும் காவல்துறை வெளியிடவில்லை: கோவை காவல் ஆணையர்

கோவை: கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தீவிரவாத ஊடுருவர் குறித்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் அல்லது சந்தேக நபர்கள் புகைப்படம் எதையும் காவல்துறை வெளியிடவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 6 பேர் கொண்ட தீவிரவாதிகள் குழு தமிழகத்திற்குள் ஊடுருவி கோவையில் நுழைவதாக எச்சரிக்கை வந்தது எனவும், எனவே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார். இதை அடுத்து அனைத்து வணிக வளாகங்கள், முக்கியமான கோவில்கள், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும், ராணுவம் மற்றும் விமானப்படை தளங்களில் பாதுகாப்பை உஷார் நிலையில் வைக்குமாறு தகவல் கொடுத்துள்ளோம் எனவும் ஆணையர் தெரிவித்தார்.

நகரம் முழுவதும் சோதனை சாவடிகள் உஷார்படுத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்படும் பட்சத்தில் பயன்படுத்த 10 அதிரடிப் படைக்குழுக்கள் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பொதுவான ரெட் அலர்ட் எச்சரிக்கை நிலை பராமரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஊடகங்களில் சில புகைப்படங்கள் காட்டப்பட்டன, சந்தேக நபர்களின் புகைப்படங்கள் எதையும் காவல்துறை வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பை பலப்படுத்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும், சந்தேக நபர்கள் என குறிப்பாக யாரும் இல்லை, பொதுவான எச்சரிக்கை தான் விடப்பட்டுள்ளது எனவும் மேலும் தேடுதல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதில் மக்கள் பயப்படுவதற்கோ, கவலைப்படுவதற்கோ எதுவுமில்லை பொதுவான எச்சரிக்கை தான் விடப்பட்டுள்ளது எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories: