நிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்!

புதுடெல்லி: எரிபொருள் வாங்கியதற்கான நிலுவைத் தொகைகளை செலுத்தாத காரணத்தால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ராஞ்சி, மொகாலி, பாட்னா, விசாகப்பட்டினம், பூனே, கொச்சி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்களில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். எனினும் தற்போதைய நிலையில் விமானப்போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரச்சனைக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்ட எரிபொருளுக்காக இதற்கு முன்னர் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.60 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

அதுமட்டுமல்லாது, இந்த ஆண்டில் எங்களுடைய செயல்பாடு நல்லபடியாகவே உள்ளது. லாபம் ஈட்டும் நிலையை நோக்கி ஆரோக்கியமான முறையில் இயங்கி வருகிறோம். சட்டச் சிக்கல்களுக்கு இடையிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே 6 விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதை இந்தியன் ஆயில் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தாங்கள் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், விரைவில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என நம்புவதாக கூறியுள்ளனர். பொத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் சுமையில் சிக்கியுள்ளது. மத்திய அரசிடமிருந்து அந்நிறுவனத்துக்கு போதிய உதவி கிடைக்காததால் செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக, ஜூலை மாதம் முதல் ஏர் இந்தியா விமானிகளுக்கு சம்பளம் வழங்குதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் சம்பளச் செலவில் 85 சதவீதம் விமானிகளுக்கே செல்வதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: