விழுப்புரம் அருகே ATM-ல் பணம் எடுப்பவர்களை ஏமாற்றி ரூ. 5 லட்சம் வரை கொள்ளையடித்த நபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுப்பவர்களை ஏமாற்றி ரூபாய் 5 லட்சம் வரை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் எறும்பூண்டி பகுதியை சேர்ந்தவன் நவீன்குமார். ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் எடுக்க வருவோரை ஏமாற்றி பணம் பறிப்பதில் கை தேர்ந்த இவன் ஏ.டி.எம் மையத்திற்கு வரும் வயதானவர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு பணம் எடுத்து தர உதவுவது போல முதலில் பாசாங்கு செய்வான். முதியவர்களிடம்  ஏ.டி.எம் கார்டுகளை வாங்கிக் கொண்டு  ஏ.டி.எம் யில் அந்த கார்டை செலுத்தி ரகசிய எண்ணை அழுத்தும் அவன், சிறிது நேரம் கழித்து பணம் வரவில்லை எனவும், கார்டை எடுத்துக் கொள்ளுமாறும் முதியவர்களிடம் கூறுவான். அவ்வாறு கார்டுகளை வழங்கும் போது ஒரிஜினல் கார்டுகளை வழங்காமல் தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த சம்பந்தப்பட்ட வங்கிகளின் போலியான ஏ. டி.எம் கார்டுகளை வழங்கிவிட்டு அங்கிருந்து தப்பி விடுவான்.

Advertising
Advertising

பின்னர் மற்றொரு ஏ.டி.எம் மையத்திற்கு சென்று முதியவர்களிடம் இருந்து பெற்ற கார்டுகளையும், ரகசிய எண்ணையும் பயன்படுத்தி நூதனமாக பணத்தை கொள்ளை அடிப்பான். பல்வேறு பகுதியில் இதுபோல கொள்ளையடித்துள்ள இவன் மீது ஏராளமான வழக்குகள் பதிவான நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு நவீன்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி  ஏ.டி.எம் மையத்தில் கப்பலாம்பாடி பகுதியை சேர்ந்த தேவிகா என்பவரிடமும் அந்த நபர் கைவரிசை காட்டி 15 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்ததாக வந்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக தலையில் தொப்பி அணிந்துக் கொண்டு போலீசாரை பார்த்ததும் ஓட்டம் எடுத்த நபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் நடந்த விசாரணையில் அந்த நபர் தான், நூதன கொள்ளையில் ஈடுபட்டு வந்த நவீன்குமார் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவனை கைது செய்த போலீசார் கடந்த ஓராண்டில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை அந்த நபர் கொள்ளையடித்ததை கண்டறிந்து அவனிடம் இருந்து 2.25 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையனிடம் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Related Stories: