×

திருப்பரங்குன்றம் அருகே பாதையில்லை விவசாய நிலங்கள் வழியே அரசு பள்ளிக்கு பயணம்

*  படாதபாடு படும் பள்ளி மாணவர்கள்
* மழைக்காலங்களில் வரப்பு தான் வழி

திருப்பரங்குன்றம் :   திருப்பரங்குன்றம் அருகே பள்ளி செல்ல நிரந்தர பாதை வசதி இல்லாததால் விவசாய நிலங்கள் வழியே மாணவர்கள் நடந்து செல்லும் அவலநிலை தொடர்கிறது. இதுகுறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மதுரை திருப்பரங்குன்றம் அருகே பெரிய ஆலங்குளத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.  பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் பெரிய ஆலங்குளம், வலையப்பட்டி, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.

புதிய பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு தினகரனில் வெளிவந்த செய்தியின் எதிரொலியால்  இந்த பள்ளி திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கு  செல்ல நிரந்தரமான பாதை வசதி இல்லாததால் மாணவர்கள் விவசாய நிலங்களின் வழியாக சென்று வருகின்றனர். தற்போது  விவசாய நிலங்களின் வழியே மாணவர்கள் சென்று வருவதால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம்  நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள் சோர்வடைந்து விடுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

இதுகுறித்து திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் பல முறை புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பெரிய ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டியன் கூறுகையில், பள்ளி துவக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் பள்ளிக்கூடம் சென்றுவர நிரந்தரமான பாதை வசதி இல்லை. தற்போது விவசாய நிலம் வழியாகவே மாணவர்கள சென்று வருகின்றனர். தற்போது உள்ள பாதையில்  மழைக்காலத்தில் விவசாயம் செய்யப்பட்டால், மாணவர்கள் வரப்பு வழியாக மட்டுமே பள்ளி செல்ல முடியும். மேலும் மழைக்காலங்களில்  பள்ளி சென்று வருவது மிகுந்த சிரமம்.

இந்த பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் - ஆலங்குளம் சாலை உள்ளது. அந்த இடத்திற்கு பாதை வசதி ஏற்படுத்த அரசுக்கு சொந்தமான நிலமும் உள்ளது.  இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாணவர்களுக்கு பள்ளி சென்றுவரும் வகையில் நிரந்தர பாதை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என கூறினார்.


Tags : thiruprankundram ,Students ,Agricluture ,school
× RELATED நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த...